சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது -  முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 18 May 2018 11:53 PM GMT (Updated: 18 May 2018 11:53 PM GMT)

சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று ஊட்டி மலர் கண்காட்சி தொடக்க விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஊட்டி ,

நீலகிரி மாவட்ட தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை மற்றும் எரிசக்தி துறை சார்பில் 122–வது ஊட்டி மலர்க்கண்காட்சி தொடக்க விழா மற்றும் குந்தா நீரேற்று புனல் மின் திட்டப்பணிகள் தொடக்க விழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று காலை தொடங்கியது.

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார். மலர் கண்காட்சி மற்றும் குந்தா நீரேற்று புனல் மின் திட்டப்பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை போல் தற்போதைய அரசும் ஊட்டியை தன் செல்லப்பிள்ளையாக நினைத்து பாராட்டி, சீராட்டி பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அளித்து வருகிறது. எனவே தான், கடந்த 30.12.2017 அன்று எம்ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது ஊட்டி நகராட்சிக்காக 27 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், 5 கோடி ரூபாய் செலவில் நஞ்ச நாடு, இன்ட்கோ கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உட்பட 57 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 258 பணிகளை தொடங்கி வைத்தேன்.

இது மட்டுமன்றி, நீலகிரி மாவட்டத்திற்கு தமிழக அரசு செய்து வரும் பணிகள் ஏராளம். இன்றைக்கு தமிழ்நாட்டை இருளில்லா மாநிலமாகவும், மின்மிகை மாநிலமாகவும் மாற்றியதில் இங்குள்ள பைகாரா இறுதிநிலை நீர்மின் நிலையம், மரவகண்டி, மாயார் மற்றும் குந்தா நீர்மின் நிலையங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். ஆசியாவிலேயே அதிக அழுத்தம் மற்றும் உயரம் கொண்ட முதல் புனல் மின் உற்பத்தி நிலையம் இதுதான்.

கடந்த 2011–ம் ஆண்டுக்கு முன்பு மின்சார தட்டுப்பாட்டிலும், மின்சார தடைகளாலும், தமிழ்நாடு இருளில் மூழ்கி இருந்தது. மக்களின் துயரத்தை தன் துயரமாகக் கருதி, மின்பொறியாளர்களை முடுக்கி விட்டு, நீண்ட கால மின் திட்டங்களுக்கு தேவைப்படும் பல்வேறு ஒப்புதல்களை பெற்று விரைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டை ஒளிமயமான மாநிலமாக ஜெயலலிதா மாற்றினார். அதன் விளைவு தான் இன்று வரை தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

எரிசக்தி துறை சார்பில், நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு கிராமம், காட்டுகுப்பை பகுதியில் 1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குந்தா நீரேற்று புனல்மின் திட்டத்திற்கான பணிகளை இன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. 2021–22–ம் ஆண்டில் நிறைவு பெறவுள்ள இந்த திட்டம், நாளொன்றுக்கு 3 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உடையது. இதனால் ஆண்டுக்கு சுமார் ஆயிரத்து 95 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கிடைக்கும்.

சமூக அக்கறையோடு மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள். நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும், தமிழ்நாடு மட்டுமல்லாமல், நம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கியம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையமும், சிறந்த 5–வது போலீஸ் நிலையமாக சென்னை அண்ணா நகர் போலீஸ் நிலையமும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே, சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்படுவதிலே, தமிழகம் சிறந்து விளங்குகிறது என்பதை இந்த போலீஸ் நிலையம் தேர்ந்து எடுக்கப்பட்டதில் இருந்து தெளிவாக தெரிகிறது.

ஜெயலலிதா ஆட்சியில் 65 அரசு கலைக் கல்லூரிகளும், இந்த ஓராண்டு காலத்தில் 11 அரசு கலைக் கல்லூரிகளுமாக மொத்தம் 76 கல்லூரிகளை அரசு வழங்கி உள்ளது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் குறைந்த கட்டணத்திலே உயர்கல்வி படிக்கக்கூடிய சூழலை அரசு ஏற்படுத்தி உள்ளது.

இதன் விளைவாக மாணவர்களின் சேர்க்கை தொடக்க கல்வியில் 99.85 சதவீதமும், நடுநிலைப் பள்ளி களில் 99.11 சதவீதமும் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் சேர்க்கை விகிதமும், மேல்நிலைப் பள்ளிகளில் 77.64 சதவீதமும் உயர்ந்துள்ளது. அகில இந்திய அளவில், தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண் ணிக்கை 46.94 சதவீதம் உயர்ந்து, இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது

மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மூலமாக 2 கைகளை இழந்த ஒருவருக்கு 2 கைகளும் பொருத்தப்பட்டு இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஒரு தொழிலாளி 2 கைகளையும் இழந்திருக்கிறார். அவருக்கு இறந்தவர் உடலில் இருந்து இரண்டு கைகளையும் எடுத்து பொருத்தப்பட்டு 2 மாதம் ஆகிறது. அவர் நல்ல நிலையில் இருக்கிறார். ஆகவே, இன்றைக்கு சரித்திர சாதனை படைத்திருக்கிறது.

இந்தியாவிலேயே, அரசு மருத்துவமனையில் இப்படி 2 கைகளையும் இழந்த ஒருவருக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் மூலமாக 2 கைகளும் பொருத்தப்பட்ட வரலாறு கிடையாது. மேலும் 1,056 இறந்த கொடையாளிகளிடம் இருந்து 5,933 முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு தொடர்ந்து அகில இந்திய அளவில் மூன்றாவது முறையாக தமிழகம் உடல் தானத்தில் முதன்மை மாநிலமாக பரிசை பெற்றுள்ளது

உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையிலே அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்படி இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும். இந்தியாவிலேயே எங்கும் இந்த திட்டம் இல்லை.

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீது நீலகிரி மாவட்ட மக்கள் மிகுந்த அன்பு கொண்ட வர்கள். அவர்கள் இங்கு வைத்த கோரிக்கைகளை எல்லாம் அரசால் பரிசீலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட காலமாக காவிரி பிரச்சினை உள்ளது. எம்.ஜி.ஆர். இருக்கிற போதே 1986–ம் ஆண்டே மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதை தீர்ப்பதற்கு உடனடியாக நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதன் பிறகு மத்திய அரசால் நடுவர் மன்றம் அமைக்கப் பட்டது. 2007–ல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு 2013–ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

சட்ட போராட்டத்தின் மூலமாக, இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே, உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடரப்பட்டது. கிட்டத்தட்ட 32 ஆண்டு காலம், தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாய பெருங்குடி மக்களும், பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், அ.தி.மு.க.வும் போராட்டம் நடத்தியது.

அப்படி பல்வேறு போராட்டங்களின் மூலமாக 32 ஆண்டுகாலமாக தீர்க்கப்படாத இந்த பிரச்சினை இன்றைக்கு தீர்வு காணக்கூடிய ஒரு சூழ்நிலையை, இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story