சூரிய மண்டலம் குறித்த தகவல்களைத் தரும் விண்கல்


சூரிய மண்டலம் குறித்த தகவல்களைத் தரும் விண்கல்
x
தினத்தந்தி 19 May 2018 12:50 PM IST (Updated: 19 May 2018 12:50 PM IST)
t-max-icont-min-icon

பூமியில் இருந்து நெடுந்தொலைவில் இருக்கும் விண்கல்லை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகளுக்குப் பல ஆண்டுகள் ஆயின.

சூரிய மண்டலத்தில் கிரகங்களுக்கு அப்பால் உள்ள கைப்பர் வளையத்தில் கார்பன் அதிகம் உள்ள விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய மண்டலம் குறித்த கூடுதல் தகவல்களை அறிய இந்த விண்கல் உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால் இருக்கும் பனிக்கட்டிகளின் குவியலை வட்ட மடித்துக்கொண்டிருக்கும் அந்த விண்கல், நெப்டியூனில் இருந்து உருவாகவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 300 கிலோமீட்டர் அகலமுடைய அந்தப் பெரும் விண்கல், சிறிய கோள்களான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ அல்லாத வேறு கிரகங்களின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து, நமது சூரிய மண்டலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பூமியில் இருந்து நெடுந்தொலைவில் இருக்கும் அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகளுக்குப் பல ஆண்டுகள் ஆயின.

‘‘முதலில் அந்த விண்கல் குறித்த தகவல்களைப் பெற்றபோது, நாங்கள் தவறான தகவல்களையே பெற்றுள்ளோம் என்று கருதினோம். காரணம் அது கைப்பர் வளையத்தில் இருக்கும் ஒரு விண்கல்லைப் போல இல்லை’’ என்று அந்த ஆய்வில் பங்கேற்ற குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் டாம் செகல் கூறினார்.

கிரகங்களைக் கடந்து இருக்கும் சூரிய மண்டலத்தின் ஒரு பகுதியான கைப்பர் வளையத்தில் இருக்கும் விண்கற்கள், தங்களின் மேற்பரப்பில் பனியால் அதிகம் மூடப்பட்டிருக்கும். ஆனால், 2004 ஈடபிள்யூ95 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், கார்பனை அதிக அளவில் கொண்டிருக்கிறது. அத்துடன், பில்லோசிலிகேட்ஸ் எனப்படும் தாதுக்களையும் இது கொண்டுள்ளது.

இந்த விண்கல்லில் திரவ வடிவில் நீர் இருந்ததால், அதன் பாறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறும் செகல், ‘‘2004 ஈடபிள்யூ95 விண்கல் சூரியனில் இருந்து நீண்டதூரத்தில் உள்ளது. அதன் வெப்பநிலை மைனஸ் 235 டிகிரி செல்சியஸ். எனவே அதன் மேற்பரப்பில் பனி உறைந்த நிலையில் இருக்கும். இதற்கு முன்பு திரவ வடிவில் இருந்தது என்றால், அந்த விண்கல் முன்னொரு காலத்தில் சூரியனுக்கு அருகில் உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், அதன் வெப்பம் அதிகமாக இருந்தது என்றும் தெரியவருகிறது’’ என்கிறார்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரியான் ஜோன்ஸ், ‘‘கைப்பர் வளையத்தில் உள்ள ஒரு விண்கல்லில் பில்லோசிலிகேட்ஸ் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை’’ என்று கூறுகிறார்.

சூரிய மண்டலம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்கும் கோட்பாடுகளில் ஒன்றான ‘கிராண்ட் டேக் கருத்து’, தொடக்க காலத்தில் சூரிய மண்டலம் கொந்தளிப்பு மிகுந்த பிரதேசமாக இருந்ததாகக் கூறுகிறது. அப்போது வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் சூரியனுக்கு அருகில் நகர்ந்து சென்று, மீண்டும் தற்போது இருக்கும் சுற்றுவட்டப் பாதைகளில் நிலைபெற்றன.

இந்த நிகழ்வுகளின்போது, விண்ணில் இருந்த பெரும் அளவிலான வாயுக்களால் உண்டான விண்கற்கள், சூரிய மண்டலத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கலாம். அதன்பின் அவை அந்த இடங்களிலேயே நிலைகொண்டிருக்கலாம். 2004 ஈடபிள்யூ95 விண்கல் அந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறது.

2004 ஈடபிள்யூ95 விண்கல் போலவே பல பொருட்கள் கைப்பர் வளையத்தில் இருந்தாலும் அவை குறித்த போதிய தகவல்களைத் திரட்ட முடியவில்லை என்கிறார் செகல். நாசாவின் நியூ ஹாரிசன்ஸ் விண்கலம், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்று அல்டிமா தூலே என்ற விண்கல்லைச் சென்றடையவிருக்கிறது.

அதன்மூலம், சூரிய மண்டலத்துக்கு வெளியே அமைந்துள்ள விண் பொருட்கள் பற்றிய தகவல்களை அறியலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

Next Story