ஈரோட்டில் தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை
ஈரோட்டில், ஒருதலை காதலால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு,
ஈரோடு பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் சுபாஷ் (வயது 23). எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் கூறியபோது அவர் ஏற்றுக்கொள்ள வில்லை.
எனினும் சுபாஷ் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலை அந்த பெண் ஏற்றுக்கொள்ளாததால் சுபாஷ் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சுபாஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். காலையில் வீட்டில் இருந்தவர்கள் எழுந்து பார்த்தபோது சுபாஷ் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுபாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒருதலை காதலால் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.