பரமக்குடி அருகே குண்டும் குழியுமான சாலையை குப்பைகளை கொட்டி சீரமைக்கும் பொதுமக்கள்
பரமக்குடி அருகே குண்டும் குழியுமான சாலையை குப்பைகளை கொட்டி பொதுமக்கள் சீரமைத்து வருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே வேந்தோணி ரெயில்வே கேட்டில் இருந்து அங்குநகர் வழியாக முத்துச்செல்லாபுரம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. பல கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த சாலை வழியாகத்தான் பரமக்குடிக்கு வரவேண்டும்.
சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சைக்கிளில் பரமக்குடிக்கு படிக்க வருவதால் பழுதாகி கிடக்கும் சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் குத்தி அடிக்கடி டயர் பஞ்சராகி விடுகிறது. இதனால் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை இருந்து வருகிறது. மேலும் அவசரத்துக்கு ஆம்புலன்சு வாகனங்கள் கூட வரமுடியாத நிலையில் சாலை உள்ளது.
இதுகுறித்து பலமுறை யூனியன் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து பலர் விபத்துக்குள்ளாகின்றனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் குண்டும் குழியுமான பள்ளங்களில் அவ்வப்போது குப்பைகளை கொட்டி சீரமைத்து விபத்துகள் நடப்பதை தவிர்க்க வழிவகை செய்கின்றனர். மழை பெய்தால் அந்த குப்பையும், மண்ணும் சேர்ந்து சகதியாக மாறிவிடுவதால் வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர். எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.