உலக நாடுகள் பொதுவாக்கெடுப்பு மூலமாக இலங்கையில் தனித்தமிழ் ஈழத்தை அமைத்துத்தர வேண்டும் வேல்முருகன் பேச்சு
உலக நாடுகள் பொதுவாக்கெடுப்பு மூலமாக இலங்கையில் தனித்தமிழ் ஈழத்தை அமைத்துத்தர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ராம.ரவிஅலெக்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், வெற்றிவேல், அய்யனார், பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர் இனப்படுகொலை நடந்தது. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள், ஏவுகணைகள் ஆகியவை பொதுமக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மீது வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 1½ லட்சம் பேர் செத்து மடிந்தனர். இதை இந்திய தேசியம், காந்திய தேசியம் வேடிக்கை பார்த்தது. தமிழக அரசு வெறும் தீர்மானத்தைதான் நிறைவேற்றினார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசும், அன்றைய தமிழக அரசும், இன்றைய தமிழக அரசும் இன்னமும் மவுனம் காத்துதான் வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்கிற 7 கோடி மக்களில் வெறும் 1 சதவீதம் பேர் வீதிக்கு வந்து இந்திய அரசுக்கு சரியான அழுத்தத்தை கொடுத்திருந்தால் அந்த இனப்படுகொலை நடந்திருக்காது. தாய் தமிழகம் வீதிக்கு வந்து அறவழியில் போராடியிருந்தால் அந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் நாம் டாஸ்மாக் கடையில் வீழ்ந்தும், ஐ.பி.எல். ஆட்டத்தை பார்த்தும் ரசித்தோம். தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கும், நோட்டுக்கும் அலைந்து திரிந்தோம், அழிந்தோம்.
தற்போது இலங்கையில் நம் தமிழ் உறவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகள் அவர்களுக்கு அமைதி வழியில் பொது வாக்கெடுப்பு மூலமாக தனித்தமிழ் ஈழத்தை அமைத்துத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில வக்கீல் அணி செயலாளர் காந்திகுமார், மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, தலைமை நிலைய செயலாளர் கனல்கண்ணன், மாநில தலைமை செய்தி தொடர்பாளர் குபேந்திரகுணபாலன், தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஜம்புலிங்கம், தலைவர் சிவராமன், பொருளாளர் பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தலைவர்கள் பாலமுருகன், திராவிடநாகு, செயலாளர்கள் மணிகண்டன், அரங்க.ராமானுஜம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் யுவராஜ், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ரகுமான் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சாய்கமல் நன்றி கூறினார்.