ஜமாபந்தி குறித்து பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்க கலெக்டர் உத்தரவு


ஜமாபந்தி குறித்து பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 20 May 2018 4:15 AM IST (Updated: 20 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்களில் நடைபெறும் ஜமாபந்தி குறித்து பொதுமக் களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சாந்தா உத்தரவிட்டார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் 1427-ம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) வருகிற 24-ந்தேதி முதல் தொடங்குகிறது. ஜமாபந்தியினை சிறப்பாக நடத்திட மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 24, 25 மற்றும் 29-ந்தேதி ஆகிய 3 நாட்கள் எனது தலைமையில் நடைபெறும். குன்னம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமையில் வருகிற 24, 25, 29, 30-ந்தேதிகளில் நடைபெறும். வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் வருகிற 24, 25, 29, 30-ந்தேதிகளில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) விஜயலட்சுமி தலைமையில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் 24, 25, 29, 30-ந்தேதிகளில் உதவி ஆணையர் (கலால்) சேதுராமன் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே ஜமாபந்தி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரி மூலமாக பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளிக்குமாறு தண்டோரா மூலம் தெரிவிக்க வேண்டும்.

ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட வேண்டும். வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமருவதற்கு போதுமான அளவில் பந்தல், நாற்காலிகள் மற்்றும் குடிநீர் வசதிகளை அனைத்து தாசில்தார் களும் செய்து கொடுக்க வேண்டும்.

வருவாய் ஆய்வாளர்கள் பராமரித்து வரும் அனைத்து பதிவேடுகளையும், வருவாய் தீர்வாய அலுவலரின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் மனுக்களை அதிகாரிகள் முடிந்த வரையில் அந்தந்த நாட்களிலேயே முடிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேதுராமன் மற்றும் அனைத்து தாசில்தார் களும் கலந்துகொண்டனர். 

Next Story