குப்பைகளை அள்ளாததால் ஆத்திரம்: நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


குப்பைகளை அள்ளாததால் ஆத்திரம்: நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 May 2018 4:45 AM IST (Updated: 20 May 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குப்பைகள் அள்ளப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்கு சேரும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் தரம் பிரித்து பெத்துகுளம் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். பெத்துகுளம் சுற்று பகுதியானது தற்போது குடியிருப்புகளாக மாறியுள்ளன. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதால் மலைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும் குப்பைக்கிடங்கில் அவ்வப்போது மர்மநபர்கள் தீ வைத்து செல்கின்றனர். இதனால் வெளியேறும் புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகின்றன.

எனவே இந்த குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பை கிடங்கை இடம் மாற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் பெத்துகுளம் குப்பை கிடங்குக்கு நகராட்சி வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. இதனால் சில நாட்கள் வரை குப்பைகள் அகற்றப்படாமல் கிடந்தன. இதையொட்டி தற்காலிகமாக 2 மாதங்களுக்கு மட்டும் கம்பம் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. 2 மாதத்துக்குள் மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

இதற்கிடையே 2 மாத கால அவகாசம் முடிவடைந்து விட்டதால் கம்பம் நகராட்சி குப்பை கிடங்கில் கடந்த 10 நாட்களாக குப்பைகள் கொட்டப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் கடந்த 10 நாட்களாக குப்பைகள், கழிவுகளை அகற்றாமல் அனைத்து தெருக்களிலும் மலைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் மத்தியில் கடும்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், நேற்று நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கூடலூர்-குமுளி தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடலூர் தெற்கு, வடக்கு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நகராட்சி அதிகாரிகளிடம் கலந்து பேசி குப்பை, கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ஒன்று திரண்டு பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story