தெய்வத்தின் அருள் இருந்தால் கஷ்டங்கள் வராது சக்தி அம்மா பேச்சு


தெய்வத்தின் அருள் இருந்தால் கஷ்டங்கள் வராது சக்தி அம்மா பேச்சு
x
தினத்தந்தி 19 May 2018 11:27 PM GMT (Updated: 19 May 2018 11:27 PM GMT)

தெய்வத்தின் அருள் இருந்தால் மனிதனுக்கு கஷ்டங்கள் வராது என்று 5,008 ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கும் விழாவில் சக்தி அம்மா கூறினார்.

வேலூர்,

வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மாவின் 42-வது ஜெயந்தியை யொட்டி, நாராயணி பீடத்தில் ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகிய 4 வேதங்களின் யாகங்கள் மற்றும் சண்டி யாகம் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாராயணி பீடத்தில் சமூக நலத்திட்டத்தின் ஒன்றான வஸ்திர தானம் திட்டத்தின் மூலம் 5,008 ஏழைகளுக்கு வேட்டி, சேலை தானமாக வழங்கும் விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு சக்தி அம்மா தலைமை தாங்கினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, வெளிநாட்டு பக்தர் பரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் சக்தி அம்மா 5,008 ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி பேசியதாவது:-

தெய்வத்தின் அருள் கிடைக்க மனிதர்கள் பக்தியுடன் இருக்க வேண்டும். தெய்வத்தின் அருள் அனைத்து மனிதர்களுக்கும் கிடைப்பது இல்லை. அவ்வாறு கிடைத்தால் வாழ்வில் நல்லது நடக்கும். பணக்காரர்கள், ஏழைகள் என அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் கஷ்டங்கள் இருக்கிறது. கடவுள் யாருக்கும் கஷ்டத்தை கொடுப்பதில்லை.

பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் தான், இந்த ஜென்மத்தில் கஷ்டமாக வருகிறது. ஏதோ ஒரு ஜென்மத்தில் தெரியாமல் செய்த பாவத்தால் நமக்கு துன்பங்கள் வருகிறது. பாவம் போக, கஷ்டம் போக நாம் என்ன செய்ய வேண்டும்.

தெய்வத்தின் அருளை பெற வேண்டும். தெய்வத்தின் அருள் இருந்தால் கஷ்டங்கள் வராது. அருள் கிடைக்க யாகம், பூஜைகள் செய்ய வேண்டும். வசதி இல்லாதவர்கள் அதிக பணம் செலவு செய்து பெரிய யாகம், சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. கோவில் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் யாகம், பூஜையில் கலந்து கொண்டாலே போதும்.

தினமும் காலை எழுந்தவுடன் ‘ஓம் நமோ நாராயணி’ என்ற மந்திரத்தை 10 நிமிடங்கள் சொன்னால் போதும். மனிதனின் அனைத்து பாவங்களும் போய் விடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஸ்ரீபுரம் நாராயணி பீட இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீட மேலாளர் சம்பத், அறங் காவலர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story