குப்பைகள் கொட்டும் இடமாக மாறிய குளம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


குப்பைகள் கொட்டும் இடமாக மாறிய குளம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 May 2018 11:46 PM GMT (Updated: 19 May 2018 11:46 PM GMT)

எறுமையூர் ஊராட்சியில் குப்பைகள் கொட்டும் இடமாக குளம் மாறியுள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலத்தை அடுத்த எறுமையூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பஜனை கோவில்தெரு மற்றும் வரதாபுரியம்மன் கோவில் தெரு இடையில் மிக பெரிய குளம் உள்ளது. தற்போது இந்த குளம் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி உள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் குளத்தை சீரமைக்காமல் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால் இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. குளத்தை சீரமைக்காமல் நீண்ட நாட்களாக உள்ள இந்த பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த குளத்தில் புதர் மண்டி காணப்படும் செடி, கொடிகளாலும், குப்பைக்கழிவுகளாலும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது.

குளத்தில் உள்ள புதர் மண்டி கிடக்கும் செடி, கொடிகளை அகற்றி குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடியிருக்கும் மக்களுக்கு இந்த கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். மேலும் இந்த பகுதி மக்கள் குளக்கரையின் அருகில் உள்ள கோவிலுக்கு வரும்போது குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

இந்த பிரச்சினை இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், படர்ந்து கிடக்கும் பாசிகள், மற்றும் கழிவுகளை அகற்றி குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தி தரவேண்டும் எனவும் மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story