பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் - இறைச்சிக் கோழி வளர்ப்பு-2
இறைச்சிக் கோழிகளை கூண்டுகளில் வளர்ப்பது நல்லது. கூண்டுகளில் வளர்க்கும்போது சுத்தமான தீவனம், தண்ணீர் ஆகியவை கோழிகளுக்கு கிடைக்கும்.
இறைச்சிக் கோழிகளை கூண்டுகளில் வளர்ப்பது நல்லது. கூண்டுகளில் வளர்க்கும்போது சுத்தமான தீவனம், தண்ணீர் ஆகியவை கோழிகளுக்கு கிடைக்கும். தீவனம் வீணாவதும் குறையும். வேலை ஆட்களும் அதிகம் தேவைப்படமாட்டார்கள். ஒருவரே 2 ஆயிரம் கோழிகளை பராமரிக்கலாம்.
கோழிகளின் எச்சம் கூண்டில் இருந்து கீழே விழுந்துவிடும். அதனால் எச்சம் மூலம் பரவும் நோய்களில் இருந்து கோழியை பாதுகாத்திட முடியும். மேலும் ஆழ்கூள பராமரிப்பில் கோழிகளை விரட்டிப்பிடிக்க வேண்டியதாக இருக்கும். அதனால் கோழிகள் சோர்ந்து அதன் எடை குறைய வாய்ப்புண்டு. ஆனால் கூண்டு வளர்ப்பில் இவ்வகை எடை இழப்பிற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் கூண்டு வளர்ப்பில் கோழியின் எடை அதிகமாக இருக்கும்போது, அவற்றின் மார்பு பகுதியில் கம்பி உராய்வதால், மார்பு கொப்பளங்கள் ஏற்பட்டு கோழி இறைச்சியின் தரம் பாதிக்கப்படும். எனவே அவைகளை ஓரளவு எடை வந்தவுடன் விற்பனை செய்துவிட வேண்டும். மேலும் அதிக எடையை தாங்கி கம்பி வலை மீது நின்று கோழி வளர்வதால் கால்கள் வலுவிழந்து வாதம் போன்ற கோளாறுகள் ஏற்படும். அந்த கோளாறுகளை தவிர்க்க கால்சியம் மற்றும் `உயிர்ச்்சத்து பி' போன்றவைகளை அதிகம் கொடுத்துவரவேண்டும்.
வண்ண இறைச்சிக் கோழி என்ற ஒருவகையும் இருக்கிறது. இவை 30 நாட்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. இவற்றை வீரிய இன இறைச்சிக் கோழிகளை போலவே வளர்க்கலாம். இவைகளுக்கான கொட்டகை அமைப்பு, இளங்குஞ்சு வளர்ப்பு, தீவனம் அளித்தல் போன்றவைகளை இறைச்சிக் கோழிகளுக்கு அளிப்பது போலவே அளித்திட வேண்டும். கோழிகளின் எடை ஒரு மாதத்தில் 400 முதல் 600 கிராம் வரை இருக்கும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இவை எடுத்து செல்லப்பட்டு அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
கோழிக் குஞ்சுகள் வளர்க்கும் பண்ணைகளை மிக கவனமாக பராமரிக்கவேண்டும். புதிய பண்ணையாக இருந்தால் பிரச்சினை இல்லை. பழைய பண்ணையாக இருந்தால், அங்கிருந்த கோழிகள் எடுக்கப்பட்ட பின்னர் அங்கிருந்த எருவை எடுக்கும் முன் பண்ணையின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்திட வேண்டும். பொது சுகாதாரம், கிருமி நீக்கம் செய்வதற்கான மேலாண்மையை முறையாக ஒவ்வொரு பிரிவு கோழிகள் பண்ணைக்கு வரும்போதும் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் இறப்பு விகிதத்தை குறைத்து அதிக லாபத்தை பெறலாம்.
இறைச்சிக்கோழிகளின் தீவன முறையில் ஆரம்ப கால தீவனம், முடிவு கால தீவனம் என இருவகை பின்பற்றப்படுகிறது. தேவையான அனைத்து சத்துகளும் அடங்கிய சரிவிகித தீவனத்தையே எல்லா நேரமும் கோழிகளுக்கு வழங்கவேண்டும். அவைகளுக்கு உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்கக்கூடாது. விடியற்காலை பொழுதிலும், விளக்கொளியிலும் சிறிய அளவில் அடிக்கடி தீவனம் அளிக்க வேண்டும். ஏனெனில் வெயில் குறைந்த நேரங்களில் கோழிகள் அதிக தீவனம் எடுக்கும். தீவனத்தில் சற்று நீர் கலந்து ஈரமான தீவனமாகவும் அளிக்கலாம். ஆனால் ஈரமான தீவனம் தீவன தொட்டியிலேயே தேங்கிவிடாமல் அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டும். கோழிகளின் எண்ணிக்கைக்கு தக்கபடி போதுமான அளவு தீவனத் தொட்டிகள் அமைத்திருக்கவேண்டும். கோழிகளின் வயதுக்கு ஏற்ப தீவன தொட்டிகளின் அளவை மாற்றி அமைப்பது அவசியமாகும். அரைக்கப்பட்ட தீவனத்தை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்கக்கூடாது.
கோழி வளர்ப்புச் செலவில், அதற்கு தீவனம் அளிப்பதே முக்கியமானது. அந்த செலவு 60 முதல் 70 சதவீதமாக இருக்கும். எனவே தரமான தீவனத்தை குறைந்தசெலவில் தயாரித்து, அதை வீணாக்காமல் கோழிகளுக்கு கொடுத்து நல்ல பலனை அதிக செலவில்லாமல் அடைய வேண்டும். தீவனத்தை பண்ணையாளர்களே தயாரிக்கலாம். அதற்கான மூலப்பொருட்களை தரம் பார்த்து வாங்கவேண்டும்.
கோழி தீவனத்தில் சேரும் முக்கியமான மூலப்பொருட்களில், தீவன எதிருயிரி குறிப்பிடத்தக்கது. நுண்ணுயிரிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கரையக் கூடிய அங்ககப் பொருட்களே எதிருயிரியாகும். இவை நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் வளர்வதை தடுப்பதோடு அவற்றை அழிக்கவும் செய்யும். மேலும் கோழிகளுக்கு அதிக வளர்ச்சியை கொடுக்கும். இறப்பு விகிதத்தை குறைக்கும். எதிருயிரிகள் தீவனத்தில் குறைந்த அளவே சேர்க்கப்படுகின்றன. குளோர் டெட்ரா சைக்கிளின், ஆக்சி டெட்ராசைக் கிளின், விர்ஜினாமைசின், டைலோசின், சிங் பேசிட்ரசின் போன்றவை எதிருயிரிகளாகும்.
கோழித் தீவனத்தில் சேர்க்கப்படும் தீவன நொதிகள் ஊட்டச்சத்துக்களை செரிமானம் செய்ய தூண்டுகின்றன. ஸ்டார்ச், கூட்டு சர்க்கரை அல்லாத பொருட்களை செரிமானம் செய்ய உதவும். தீவன நொதிகள் குடலின் அடர்த்தியை குறைத்து தீவனத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், கோழிகளுக்கு எளிதில் கிடைக்குமாறு செய்கின்றன. உடல் எடை மற்றும் தீவன மாற்றுத்திறனை அதிகரிப்பதோடு, கழிவில் ஈரப்பதத்தையும் குறைக்கும். செல்லுலோஸ், ஹெமிசெல்லுலேஸ், புரோட்டியேஸ் போன்றவை தீவன நொதிகளாகும்.
கோழிகளின் உடலில் ஆதரவு நுண்ம உயிர்கலவை உள்ளது. இது கோழி களுக்கு நன்மை செய்யும் நுண்மக்கலவையாகும். குடலில் அமிலத்தன்மையை அதிகப்படுத்துவதோடு, குடலின் தடிமனை குறைத்து ஊட்ட சத்துகள் நன்றாக உறிஞ்சப்படுவதற்கு உதவுகின்றன. இவை உடல் எடையை அதிகரிக்கும். கோழிகளின் இறப்பு சதவீதத்தை குறைக்கும்.
கோழி பண்ணை மற்றும் பண்ணையில் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது, கோழிகள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு. நோய்களை கண்டறிந்து விரைவில் குணப்படுத்த தவறினால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆகையால் கோழிகளை தாக்கும் நோய்கள் பற்றி பண்ணையாளர்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நோய் தடுப்பு முறையை எளிதில் கையாண்டு, இறப்புகளை தடுக்க முடியும்.
இறைச்சிக் கோழிகளை ராணிக்கேட் நோய், கோழி அம்மை, பர்சல்நோய், மேக்ஸ் நோய் ஆகியன தாக்குகின்றன. இவை நச்சுயிரி களால் உருவாகுபவை. இதேபோன்று நுண்மங்களால் கொரைசா நோய், சால்மொனெல்லா புல்லோரம் நோய், கோழி டைபாய்டு, கோழி காலரா, கோலி செப்டிசீமீயா, தொப்புள் அழற்சி நோய் போன்றவை ஏற்படுகின்றன.
கோழிகளை நோயின்றி வளர்ப்பது மட்டுமல்ல, அதன் விற்பனை தொழில் நுட்பத்தையும் சரிவர அறிந்துகொள்ளவேண்டும். கோழி இறைச்சிக்கான நுகர்வோர் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் இறைச்சி கோழி உற்பத்தியாளர்களுக்கோ சீரான வருவாய் கிடைப்பது இல்லை. இதற்கு காரணம் இறைச்சியின் விலை மற்ற இறைச்சிகளை போன்று ஒரு முறை நிர்ணயம் செய்யப்பட்ட விலை அல்ல. இவை சீராக தொடர்ந்து நிலைப்பதும் கிடையாது.
இறைச்சிக் கோழிகளின் விலை வாரந்தோறும் மாறுபடுகிறது. இதன் விலையை பெரும்பாலும் இடை தரகர்களே நிர்ணயம் செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கே லாபம் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உற் பத்தியாளர்களுக்கு குறைந்த அளவிலேயே லாபம் கிடைக்கிறது. எனவே புதிதாக பண்ணையை தொடங்க இருப்பவர்கள் முன்கூட்டியே விற்பனை வசதிகளை எவ்வாறு ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். பண்ணையாளர்கள் ஒவ்வொருவரும் சில்லறை விற்பனைக்காக நகர்ப்புறங்களில் சிறிய கடை அமைப்பது நல்லது. மொத்த விற்பனையை காட்டிலும் இதன் மூலம் லாபம் அதிகமாக கிடைக்கும். தற்போது நடமாடும் விரைவு உணவகங்கள் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதுபோன்ற உணவகங்களில் கோழி இறைச்சி சம்பந்தப்பட்ட உணவுகள் அதிகளவில் சுட, சுட தயார் செய்யப்படுகின்றன. அத்தகைய வாய்ப்புகளையும் இறைச்சிக் கோழி வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
(அடுத்த வாரம்: இறைச்சியில் இருந்து மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிக்கும் முறை)
தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.
Related Tags :
Next Story