சுடச்சுட பலாப்பழ ‘காபி’


சுடச்சுட பலாப்பழ ‘காபி’
x
தினத்தந்தி 20 May 2018 7:13 AM GMT (Updated: 20 May 2018 7:13 AM GMT)

கேரள மாநிலம் முட்டிபாலம் என்ற பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பலாப்பழத்தை கொண்டு விதவிதமான உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்கிறார்கள்.

ஷாஜி-ஷிஜி தம்பதியர் பலாப்பழத்தில் தயாராகும் உணவு வகைகளுடன்..
கேரள மாநிலம் முட்டிபாலம் என்ற பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பலாப்பழத்தை கொண்டு விதவிதமான உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்கிறார்கள். பலாப்பழத்தில் காபி தயாரித்தும் ஆச்சரியப்படுத்துகிறார்கள். இந்த உணவகத்தை நிர்வகிக்கும் ஷாஜி-ஷிஜி என்ற தம்பதியரின் கைவண்ணத்தில் பலாப் பழம் மாறுபட்ட சுவையில் பரிமாறப்படுகிறது.

இவர்கள் இருவரும் பலாப்பழத்தின் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். அதன் காரணமாக பலாப்பழம் சார்ந்த தொழிலையே பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். எனினும் எதுவும் லாபகரமாக அமையவில்லை. இறுதியில் பலாப்பழத்தையே மூலதனமாக கொண்டு உணவகத்தை தொடங்கிவிட்டார்கள். பலாப்பழ கொட்டையி லிருந்து ஊறுகாய், கட்லட், சமோசா, பலாப்பழ காபி பவுடர், மில்க் ஷேக், கேக் என பலாப்பழம்தான் இந்த உணவகத்தின் பிரதான ‘மெனு’ பட்டியலாக இருந்து கொண்டிருக்கிறது. 40-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை பலாப்பழத்தின் மூலம் தயார் செய்கின்றனர்.

இந்த பலாப்பழ உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பலாப்பழத்தின் மாறுபட்ட சுவையை ருசிப்பதற்காக ஏராளமானோர் அங்கு வருகிறார்கள்.

இதுபற்றி ஷாஜி-ஷிஜி தம்பதியர் கூறுகையில், ‘‘வெளிப்புறம் பசுமை நிற போர்வை போர்த்தி உள்ளே சுண்டி இழுக்கும் சுவையுடன் திகழும் பலாப்பழத்தை நினைத்தாலே நாவில் உமிழ்நீர் சுரக்கும். தென்னிந்தியர் களுக்கு பலாப்பழத்தின் மீது மோகம் அதிகம். ஏதாவதொரு வகையில் உணவில் பலாப்பழத்தை இடம்பெற செய்துவிடுவார்கள். அதுவே எங்களிடம் பலாப்பழத்தை மட்டுமே மையப் படுத்தி உணவகம் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் பலாப்பழம் சார்ந்த எத்தனையோ தொழில்களில் ஈடுபட்டிருக்கிறோம். அதில் கிடைக்காத மனநிறைவு உணவகம் மூலம் கிடைத்திருக்கிறது’’ என்கிறார்கள்.

Next Story