கை இல்லை.. கார் ஓட்டுகிறார்..


கை இல்லை.. கார் ஓட்டுகிறார்..
x
தினத்தந்தி 20 May 2018 12:52 PM IST (Updated: 20 May 2018 12:52 PM IST)
t-max-icont-min-icon

பாலமி, 12 வயதில் விபத்தில் ஒரு கையை இழந்தவர். அத்துடன் 45 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்.

பாலமி, 12 வயதில் விபத்தில் ஒரு கையை இழந்தவர். அத்துடன் 45 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர். உடல் வலுவிழந்தாலும் மன வலிமையுடன் போராடி பாதிப்பில் இருந்து மீண்டிருக்கிறார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உயர்கல்வியை முடித்துவிட்டு சொந்த நிறுவனம் தொடங்கி, திறமையான பெண் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

விபத்து பாதிப்பால் உடலளவிலும், மனதளவிலும் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி கொண்டிருக்கிறார், பாலமி. அவருக்கு இப்போது 28 வயது.

‘‘நான் அன்று மீன் பிடிக்கும் கருவியை கையில் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக அது ஜன்னல் வழியாக வெளியே விழுந்து விட்டது. அதை எடுக்க முயன்றபோது தவறுதலாக மின்சார கம்பியை பிடித்து விட்டேன். 11000 வோல்ட் மின்சாரம் என் வலது கையில் பாய்ந்ததில் விரல் பகுதி முழுவதும் கருகி போய்விட்டது. கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால் வலது கையை இழக்க நேரிட்டது. அந்த வயதில் தீக்காய பாதிப்பின் வீரியம் புரியவில்லை. மருத்துவமனையில் படுத்த படுக்கையாகவே சில வருடங்களை கழித்தேன். வலியால் அழுது துடித்தேன்.

என் உடலில் 45 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர பெற்றோரும், நண்பர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். என் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக செயற்கை கை பொருத்தப்பட்டது. ஆனால் அந்த கையால் எனது பணிகளை செய்வது பெரிய சவாலாக இருந்தது, சாத்தியமற்றதாகவும் தோன்றியது. தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சையாலும், எனது முயற்சியாலும் எழுதத் தொடங்கினேன். இயல்பு நிலைக்கு திரும்ப கடுமையாக போராடினேன். நானாகவே உடை அணிந்து கொண்டேன். கதவுகளை திறப்பதற்கும், மூடுவதற்கும் பழகினேன். பள்ளி தேர்வுகளை நானே எழுதினேன்.

முதலில் தீக்காயம் படிந்த கையை வெளியுலகத்திற்கு காண்பிக்க தயங்கினேன். கைகளை நீண்ட ஆடைகளுக்குள் மறைத்துக் கொள்வேன். வடுக்களை மறைக்க போராடினேன். ஒரு கட்டத்தில் என்னால் முடியவில்லை. இயல்பாக வாழ பழகிக்கொண்டேன். இப்போது கார் ஓட்டுகிறேன். பங்கி ஜம்ப் செய்கிறேன். வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்கிறேன்’’ என்கிறார்.

மும்பையை சேர்ந்த பாலமி எம்.பி.ஏ. படித்தவர். சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் நிர்வாக இயக்குனராக பணிபுரிகிறார். போராட்ட வாழ்க்கையில் இருந்து மகள் மீண்டு வந்திருப்பது பற்றி தந்தை பாத்ரேஷ் பட்டீல் கூறுகையில், ‘இளம்வயதில் விபத்து பாதிப்புக்குள்ளாகி பல சிகிச்சைகள் மேற்கொண்டபோதும் அதிலிருந்து மீண்டு வரும் அளவுக்கு அவளிடம் துணிச்சல் இருந்தது. சில வருடங்களை மருத்துவமனையில் தொலைத்தாலும் இன்று வாழ்வில் ஜெயித்து தொழிலிலும் சிறந்து விளங்குகிறாள். அவள் இந்த நிலைக்கு வந்திருப்பதை பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது’ என் கிறார்.

Next Story