காணாமல்போன நிலா
அடுத்த நாள், புதிதாக வாங்கிவந்த பித்தளைப் பெயர்ப்பலகையை அருண் பொருத்தி முடித்ததும், தாயம்மா அதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டாள்.
அடுத்த நாள், புதிதாக வாங்கிவந்த பித்தளைப் பெயர்ப்பலகையை அருண் பொருத்தி முடித்ததும், தாயம்மா அதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டாள்.
“இப்பதான் தம்பி என் மனசுக்கு நிம்மதியா இருக்கு..” என்றாள்.
அன்றைக்கு மாலை பூர்ணிமா அருணுடன் தனியே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பெயர்ப்பலகையை தாயம்மாதான் உடைத்தாள் என்று முத்ரா சொன்னதை சற்றுத் தயக்கத்துக்குப் பிறகு அவனிடம் அவள் பகிர்ந்துகொண்டாள்.
“நேத்தே சொல்லியிருக்கணும்.. நீ தாயம்மாவைத் தப்பா எடுத்துக்குவியோனு ஒரு தயக்கம்..” என்று பூர்ணிமா மன்னிப்பு கோரும் குரலில் சொன்னாள்.
தாயம்மா பற்றிச் சொல்லிவிட்டு, முத்ரா ஷேர் ஆட்டோ பிடித்து அலுவலகம் போனதாக பூர்ணிமா சொன்னபோது, அருணுக்குக் குழப்பம் வந்தது. பேருந்தைத் தவறவிட்டதாகச் சொல்லித்தானே முந்தின தினம் அவனுடன் அவள் பைக்கில் வந்தாள்? எதற்கு அந்தப் பொய்?
ஆனால் பைக்கில் அவளைக் கூட்டிப்போனதை இப்போது திடீரென்று பூர்ணிமாவிடம் சொன்னால், ‘நேற்றே ஏன் சொல்லவில்லை?’ என்று அவள் கேட்டால்..? சொல்ல வந்ததைச் சொல்லாமல் மென்று விழுங்கினான்.
“சீச்சீ தாயம்மாவை என் அம்மா மாதிரி நான் பாக்கறேன்.. ஒருநாளும் அவங்களைத் தப்பா நெனைக்க மாட்டேன்..” என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டான்.
* * *
மூன்றாவது நாள். இரவு மணி எட்டு.
அருண், பூர்ணிமா இருவரும் தாயம்மா செய்து கொடுக்கக்கொடுக்க பூரியை ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அழைப்புமணி ஒலித்தது.
தாயம்மா கதவைத் திறந்தாள்.
நைட்டியில் நின்றிருந்தாள், முத்ரா.
“வாங்க முத்ரா, சாப்பிடலாம்..” என்று பூர்ணிமா வரவேற்றாள்.
முத்ரா பெரிய புன்னகையுடன் நுழைந்தாள்.
“தேங்க்ஸ்.. தாயம்மா கைமணம் சும்மா கும்முனு தூக்குதே.. ஆனா, எனக்கான டின்னர் ரெடி பண்ணிட்டேன். அருண்கிட்ட ஒரு சின்ன உதவி வேணும்.. டின்னர் முடிச்சிட்டு மாடிக்குக் கொஞ்சம் வரீங்களா..?”
முத்ராவின் நைட்டி அவள் உடலுடன் ஒட்டியிருந்ததால், அவளிடமிருந்து பார்வையை விலக்க முடியாமல், அருண் தடுமாறினான்.
“எ.. என்ன விஷயம்..?”
“பெட்ரூம்ல பல்பு ப்யூஸ் போயிருச்சு. மாத்தித் தரணும்.. ரெண்டு நிமிஷ வேலைதான்..” என்று கெஞ்சலாகச் சொன்னாள், முத்ரா.
“சாப்பிட்டு முடிச்சதும், போய் மாத்திக்கொடு, அருண்..” என்று பூர்ணிமா அவனை முந்திக்கொண்டு சொன்னாள்.
“மாடில வெயிட் பண்றேன்..” என்று சொல்லிவிட்டு முத்ரா போய்விட்டாள்.
* * *
அருண் படபடக்கும் நெஞ்சுடன் மாடிக்குப் போனபோது, முத்ராவின் வீட்டுக்கதவு திறந்தே இருந்தது. படுக்கையறையில் மெல்லிய இசை ஒலித்துக்கொண்டிருந்தது.
“வாங்க, அருண்..” என்று முத்ரா புன்னகையை அகலமாக்கினாள்.
படுக்கையறைக்குள் ஹாலிலிருந்து கொஞ்சம் வெளிச்சம் சிதறிக்கொண்டிருந்தது. மற்றபடி அரையிருட்டாக இருந்தது. முத்ரா கட்டிலுக்கு நேர்மேலே கூரையில் இருந்த பல்பைக் காட்டினாள். ஒரு சின்ன முக்காலியை எடுத்து மெத்தை மேலே போட்டாள். மெத்தை ஒரு நிலையான பரப்பில்லை என்பதால், முக்காலி ஒருபுறமாக சாய்ந்து நின்றது.
“பயப்படாதீங்க.. நான் பிடிச்சுக்கறேன்.. விழுந்தாலும், என் மேலயோ, மெத்தை மேலயோதான் விழுவீங்க..” என்று முத்ரா கண்ணடித்தாள்.
அருணுக்கு ஏனோ சற்றுப் பதற்றமாய் இருந்தது. கால்களின் அடிப்பாகத்தைச் சுத்தம் செய்துகொண்டு, மெத்தையில் ஏறி, முக்காலியின் மீது ஏறினான்.
மெத்தை மீது மண்டியிட்டு அமர்ந்து முத்ரா முக்காலியைப் பிடித்துக்கொள்வாள் என்று நினைத்தான். அவளோ நின்றபடி அவன் இடுப்பை இரு கைகளாலும் பற்றிக்கொண்டாள். பல்பைக் கழற்ற அவன் கையை உயர்த்தியபோது, அவனுடைய டீ ஷர்ட் உயர்ந்து, அவளுடைய மென்மையான விரல்கள் அவனுடைய சருமத்தை நேரடியாக ஸ்பரிசித்தன. மெல்ல வருடின.
அருண் நெளிந்தான். “ப்.. புது பல்பு..?” என்று கேட்பதற்குள் நா உலர்ந்துவிட்டது.
முத்ரா ஒற்றைக்கையால் அவன் வயிற்றை அணைத்துக்கொண்டு அப்படியே குனிந்து புது பல்பை எடுத்துக்கொடுத்தாள்.
ஒருவழியாக பல்பை மாட்டிவிட்டு, அருண் இறங்கியபோது, அவன் நிலைதடுமாறிவிடக் கூடாது என்பதுபோல, அவசியத்துக்கு அதிகமாகவே அவனை அவள் அணைத்து இறங்க உதவினாள்.
அவன் எதிர்பாராத நொடியில் சட்டென்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “நன்றி..” என்றாள்.
‘இதெல்லாம் எனக்குப் பிடிக்கல..’ என்று சொல்லவேண்டும் என்று அருணுக்கு ஒருபக்கம் தோன்றினாலும், ஏனோ எதுவும் சொல்லாமல் சட்டென்று வெளியேறி வேகமாகப் படியிறங்கினான்.
* * *
பூர்ணிமா உறங்கியபின்னும் அருண் கட்டிலில் விழித்திருந்தான். நடந்ததையெல்லாம் மீண்டும் மீண்டும் மனம் அசைபோட்டது. முத்ராவின் செயல்களுக்கு அர்த்தம் என்ன? கார்த்திக்குடன் ஏற்கனவே காதலில் இருப்பவளுக்குத் தன்னிடம் என்ன கவர்ச்சி இருக்க முடியும்?
எதுவாக இருந்தாலும், இதை முளையிலேயே கிள்ளிவிடுவது நல்லது. அற்ப சபலங்களுக்கு இடம்கொடுக்கப்போய், தன் வாழ்க்கையை அலங்கோலமாக்கிக் கொண்டுவிடக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை முத்ராவுடன் நீச்சல் குளத்துக்குப் போவதில்லை என்று அப்போதே முடிவு செய்தான், அருண்.
* * *
ஞாயிற்றுக்கிழமை.
காலை 6 மணிக்கே அருண் காபி குடித்துவிட்டு, கட்டிலில் ஓய்ந்து படுத்திருந்த பூர்ணிமாவின் தோளைத் தட்டினான்.
அவள் ஒற்றைக்கண்ணைத் திறந்துபார்த்தாள்.
“என்னடா, அரை டிராயர்லாம் போட்டு ஸ்மார்ட்டா இருக்க..? எங்க புறப்பட்டுட்டே..?” என்று சோம்பலாய்க் கேட்டாள்.
“நண்பர்களோட கால்பந்து விளையாடி ரொம்ப நாளாச்சு.. கூப்ட்டுருக்காங்க. போறேன். சாப்பாட்டுக்கு வந்துருவேன்..” என்று சொல்லிவிட்டு, குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவள் அப்படியே தன்னுடைய கையை உயர்த்தி அவன் கழுத்தை வளைத்து இழுத்து முத்தமிட்டு வழியனுப்பினாள்.
* * *
காலை ஒன்பது மணியளவில் மாடி வீட்டிலிருந்து கல்பனாவும், தேவகியும் இறங்கிவந்தனர்.
“அதிகாலைல வாசல்ல டாக்ஸி வந்து நிக்கற சத்தம் கேட்டுச்சு..? சுந்தரம் சார் திரும்பி வந்தாச்சா..?” என்று பூர்ணிமா கேட்டாள்.
“ஆமா.. இந்த வாரம் எந்த டூரும் இருக்காதுன்னும் சொல்லியிருக்காரு..” என்றாள் கல்பனா.
“பாட்டி, எனக்கு தக்காளிச் செடி காட்டறீங்களா..?” என்று தேவகிக்குட்டி கேட்டதும், தாயம்மா அவளைக் கூட்டிக்கொண்டு தோட்டத்துக்குப் போனாள்.
கல்பனாவும், பூர்ணிமாவும் மாதுளம்பழத்தின் முத்துக்களை உதிர்த்துக்கொண்டு, பொதுவாகப் பெண்களுக்கே உரிய விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்க...
“அவ ஒரு மாதிரி கேரக்டர்..” என்று திடீரென்று சொன்னாள், கல்பனா.
“யாரு..?”
மாடிப்பக்கம் கண்களைக் காட்டி, “முத்ரா..” என்பதை மிக ரகசியமான குரலில் சொன்னாள்.
“ஏன் அப்படி நினைக்கறீங்க..?”
“நைட்ல யார்கூடவோ போன்ல சத்தமா பேசிட்டு இருக்கா.. பால்கனியில நின்னு பேசறதால, காதுல விழுது.. கொஞ்சிக் கொஞ்சி அவ பேசறதுலாம், ஒரு சாதாரண குடும்பப் பொண்ணு பேசற பேச்சு இல்ல..”
“ச்சீ.. ச்சீ.. தப்பா நினைக்காதீங்க, கல்பனா.. அவளும், கார்த்திக்கும் லவ் பண்ணிட்டு இருக்காங்க. அவன் வெளியூர்ல இருக்கான். அவன் கூடதான் பேசிட்டிருப்பா..”
“கார்த்திக் இல்லைங்க.. ஒரு நாள் அவ பேசினது பூரா முத்துன்னு யாரோ ஒருத்தன் கிட்ட.. இன்னொரு நாள் என் செல்ல பீட்டர்னு கொஞ்சறா..”
“சரி விடுங்க.. நமக்கு எதுக்கு அந்த பிரச்சினை..?” என்று பூர்ணிமா சொல்லிக்கொண்டிருக்கும்போது..
வாசலில் நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தால், முத்ரா!
திடுக்கென்று பூர்ணிமா, கல்பனா இருவர் முகங்களும் மாறின.
“ஹாய்..” என்று உள்ளே நுழைந்தாள், முத்ரா. முழங்காலுக்கு மூன்றங்குலம் மேலேயே நின்றுவிட்ட ஒற்றை கவுன் போன்ற பிங்க் நிற உடையை அணிந்திருந்தாள். அந்த உடையில் அவள் மிக அழகாகத் தெரிந்தாள்.
“சூப்பரா இருக்கு ட்ரெஸ்..!” என்றாள் பூர்ணிமா, தன்னை இயல்பாக்கிக்கொண்டு.
“தேங்க்ஸ்..” என்று புன்னகைத்து முத்ரா ஒன்றிரண்டு மாதுளை முத்துக்களை எடுத்து வாய்க்குள் எறிந்துகொண்டாள். “அருண் ரெடியா..?” என்றாள்.
“அருணா..? அவர் காலைலேயே கால்பந்து விளையாடறதுக்கு புறப்பட்டுப் போயாச்சே..?”
முத்ராவின் முகத்தில் மெல்லிய ஏமாற்றம். “அப் படியா..? ‘ஞாயிற்றுக்கிழமை ரெடியா இரு.. நாம சேர்ந்து நீச்சல் குளத்துக்குப் போகலாம். அது நல்ல உடற்பயிற்சி..’ன்னு என் கிட்ட சொன்னாரே..?” என்று சொல்லிவிட்டு பூர்ணிமாவின் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தாள்.
“பூர்ணிமாவையும் கூட்டிட்டு வருவீங்களானு கேட்டதுக்கு, கர்ப்பமா இருக்கும்போது நீச்சலடிக்கலாமானு தெரியல.. நான் மட்டும்தான் வருவேன்னு சொன்னாரு.. ஒருவேளை என்கூட சேர்ந்து போறதை உங்ககிட்ட சொல்ல தயங்கிக்கிட்டு கால்பந்து விளையாடப் போறதா சொல்லிட்டு புறப்பட்டுட்டாரா..?”
அவளுடைய ஒவ்வொரு கேள்வியும் பூர்ணிமாவின் முகத்தில் புன்னகையின் ஒவ்வொரு கீற்றாக அழித்துக்கொண்டே வந்தது.
-தொடரும்
Related Tags :
Next Story