நிலக்கடலை பயிரில் இலைப்புழுக்களை கட்டுப்படுத்த மானிய விலையில் சூரியஒளி மின்விளக்கு - அதிகாரி தகவல்


நிலக்கடலை பயிரில் இலைப்புழுக்களை கட்டுப்படுத்த மானிய விலையில் சூரியஒளி மின்விளக்கு - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 20 May 2018 11:30 PM GMT (Updated: 20 May 2018 7:37 PM GMT)

ஆண்டிப்பட்டி பகுதிகளில் நிலக்கடலை பயிரில் இலைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண்துறை சார்பில் சூரியஒளி மின்விளக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் சித்தார்பட்டி, ராஜதானி, கணேசபுரம், வண்டியூர், ஜி.உசிலம்பட்டி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

ஒரு சில பகுதிகளில் கிணற்று நீர் பாசனம் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலக்கடலை சாகுபடியில் மருந்து, உரம், களை எடுப்பது என செலவு செய்ய வேண்டி உள்ளது. அதுமட்டுமின்றி இலைப்புழுக்களால் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இலைப் புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் சூரியஒளி மின்விளக்கை அறிமுகம் செய்துள்ளனர். 4 மாத பயிரான நிலக்கடலையில் மருந்து தெளிக்காமல், உரமிடாமல் இலைப்புழுக்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு மானிய விலையில் சூரியஒளி மின்விளக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகர் கூறியதாவது:-

நிலக்கடலை பயிரில் ஏக்கருக்கு ஒரு விளக்கு அமைக்க வேண்டும். அதில் சோலார் தட்டுக்கு கீழ் ஒரு கிண்ணம் வைக்கப்படும். அதில் 25 கிராம் மண்எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது டீசல் ஊற்றி சோப் ஆயிலை கலந்து விட வேண்டும்.

பகல் முழுவதும் சூரிய ஒளியில் இருந்து சேமித்த மின்சாரம் மூலம் இரவு விளக்கு எரியும். அந்த விளக்கு ஒளிக்கு புழுக்கள் ஈர்க்கப்பட்டு கிண்ணத்தில் விழுந்து இறந்து விடும். ஒவ்வொரு நாளும் கிண்ணத்தில் ஊற்றும் ஆயிலை மாற்ற வேண்டும். இதன் மூலம் பராமரிப்பு செலவு குறைந்து விளைச்சல் அதிகரிக்கும். எனவே நிலக்கடலை சாகுபடியை பெருக்க ரூ.4 ஆயிரத்து 480 மதிப்புள்ள ஒரு விளக்கை ரூ.2 ஆயிரத்து 400 மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story