உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெற்று இருக்கிறோம்: காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது - முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெற்று இருக்கிறோம் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை,
கொடைக்கானல் மலர் கண்காட்சியில் கலந்து கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை செல்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 1986–ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மத்திய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அந்தக் காவிரி நடுவர் மன்றம் 205 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று இடைக்கால தீர்ப்பு ஒன்றைக் கொடுத்தது. அதற்குப் பிறகு 2007–ம் ஆண்டு நடுவர் மன்றத்தினுடைய இறுதி தீர்ப்பு வந்தது. 192 டி.எம்.சி தண்ணீர் நமக்கு வழங்கவேண்டும் என்று அந்த உத்தரவிலே கூறப்பட்டது. அப்பொழுது, மத்திய அரசு அதை அரசிதழில் வெளியிடாத காரணத்தினாலே, ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 2011–ல் நடுவர்மன்ற ஆணையம் அளித்த தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார்.
அதன் பிறகு நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால் அதை மத்திய அரசு கிடப்பில் போட்டது. மீண்டும் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தை அணுகினார். அப்போது போடப்பட்ட பல வழக்குகள் தான் இப்பொழுது தீர்ப்பாக கூறப்பட்டிருக்கின்றது. அந்த தீர்ப்பிலே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே, நடுவர்மன்ற ஆணையத்தில் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டதோ, அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தெளிவாக உச்சநீதிமன்றத்தில் சொல்லியிருக்கின்றார்கள். அதிலே நமக்கு 14.75 டி.எம்.சி. தான் குறைக்கப்பட்டிருக்கின்றது. மற்றவையெல்லாம் அதில் என்னென்ன அம்சங்கள் குறிப்பிட்டிருக்கின்றதோ, அத்தனையையும் கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கின்றது.
10 நாட்களுக்கு ஒருநாள் கணக்கிட்டு, அந்த நீரினை வழங்க வேண்டுமென்று தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். ஆகவே, ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஜெயலலிதா அரசு பெற்றுத் தந்திருக்கின்றது. நம்முடைய வழக்கறிஞர்கள் ஆணித்தனமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்தனர். 32 ஆண்டுகளாக நடைபெற்றிருந்த காவிரி நதிநீர் பிரச்சினைக்கு இப்பொழுது தீர்வு காணப்பட்டிருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்கள் முதல்–அமைச்சரிடம், ‘‘காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாடுகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுமா?‘‘ என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:–
அது தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது, அதை நாம் எப்படி சொல்லமுடியும்? நீதிமன்றம் இறுதியான தீர்ப்பை கொடுத்திருக்கின்றது. அதற்கு மேல், சந்தேகத்தை எழுப்பிக் கொண்டே இருந்தால், அதை யார் தான் முடிவு செய்வது? நீதிமன்றம் தான் இறுதியானது, நீதிமன்றத்தை நம்பித்தான் ஆகவேண்டும். ஆகவே, நீதிமன்றத்தை நாம் நாடினோம். இதற்கு முன் தி.மு.க. நாடியது. நாமும் நாடினோம், தொடர்ந்து அந்த வழக்கு நடத்திக் கொண்டிருந்தோம். இப்போது ஜெயலலிதாவின் சட்டப் போராட்டத்தின் மூலமாக உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பினை ஜெயலலிதாவின் அரசு பெற்றுத் தந்து இருக்கின்றது. ஒருசில கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தனக்குள்ள பாணியிலே பேசுகிறார்கள், அதற்கு நாங்கள் எப்படி விளக்கம் சொல்ல முடியும்? ஆகவே, அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் படித்துப் பார்த்து புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.