பாதாள சாக்கடை பணி முழுமையாக முடிவது எப்போது? அதிகாரிகள் மெத்தனத்தால் விருதுநகர் மக்கள் அவதி


பாதாள சாக்கடை பணி முழுமையாக முடிவது எப்போது? அதிகாரிகள் மெத்தனத்தால் விருதுநகர் மக்கள் அவதி
x
தினத்தந்தி 20 May 2018 7:51 PM GMT (Updated: 20 May 2018 7:51 PM GMT)

விருதுநகரில் 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி முழுமையாக முடிவடையாத நிலையில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் நகர் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விருதுநகர்,

தமிழகத்தில் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நகராட்சிகளில் விருதுநகர் நகராட்சியும் ஒன்றாகும். கடந்த 2008–ம் ஆண்டு பொதுமக்கள் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட இந்த திட்டப்பணி 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

திட்டப்பணியினை குடிநீர் வடிகால் வாரியமும், நிதி செலவினை நகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டது. நகரின் கிழக்கு பகுதியில் 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட பின்பு மேற்கு பகுதியில் திட்டப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பணியினை மேற்கொள்ளாமல் விட்டுச்சென்றதால் 2 ஆண்டுகளூக்கு முன்பு இறுதிக்கட்ட பணிகள் ரூ.31/4 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.

பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அவ்வப்போது தெரிவித்து வந்தாலும் திட்டப்பணி இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையிலேயே உள்ளது. நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கப்படாத நிலையும், குழாய்கள் பதிக்கப்பட்ட பல பகுதிகளில் வீடுகளுக்கான இணைப்புகள் வழங்கப்படாத நிலையும் நீடிக்கிறது.

கழிவு நீரேற்ற நிலையத்திற்கு செல்லும் பாதையில் உள்ள அடைப்புகளும் இன்னும் நீக்கப்பட வில்லை என கூறப்படுகிறது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால் இத்திட்டப்பணி எப்போது முழுமையாக முடிவடையும் என உறுதியாக சொல்ல முடியாத நிலை நீடிக்கிறது

திட்டப்பணியை மேற்கொண்டுள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்பதும் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதனால் நகர் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இத்திட்டத்தினை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதிலும் நகராட்சி நிர்வாகம் அதனை ஏற்க மறுப்பதிலுமாக இழுபறி நிலை நீடிக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினை குறித்து குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று திட்டப்பணியினை விரைந்து முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் இருந்து பாதாள சாக்கடை திட்ட இணைப்புக்கான டெபாசிட் தொகையை வசூலிப்பதில் காட்டும் அக்கறையினை திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் காட்ட வேண்டியது அவசியமாகும்.


Next Story