காவிரி பிரச்சினை குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
காவிரி பிரச்சினை குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை,
கோவையில் நடந்த உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை திறந்து வைத்த தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கோவையை அடுத்த வடவள்ளியில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலின்போது நான் கோவையில் இல்லை. மலர் கண்காட்சி விழாவுக்காக ஊட்டிக்கு சென்று விட்டேன். ஆனால் என் மீது டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டி இருக்கிறார். தமிழகத்தில் எது நடந்தாலும் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதே டி.டி.வி. தினகரனுக்கு வாடிக்கையாகி விட்டது.
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறந்ததும், அ.தி.மு.க.வை கைப்பற்ற அவர் நினைத்தார். அப்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர், ஜெயலலிதா உங்களை கட்சியில் இருந்து நீக்கித்தானே வைத்து இருந்தார். எனவே நீங்கள் கட்சி விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று கூறி கட்சியில் இருந்து விலக்கியும் வைத்தோம். அந்த கோபத்தில் அவர் எங்கள் மீது குறைசொல்லி வருகிறார்.
ஒற்றுமையாக இருக்கிறோம்அ.தி.மு.க.வில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அதை தாங்கிக்கொள்ள முடியாமல் கட்சிக்குள் கலகம் ஏற்படுத்துவதற்காக டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வடவள்ளியில் கூட்டம் நடத்திவிட்டு ஆக்கி மட்டைகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.
எனவே யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். மலிவான விளம்பரத்தை நாங்கள் தேடவும் இல்லை. எங்களுக்கு அதற்கான அவசியமும் இல்லை.
காவிரி பிரச்சினைகாவிரி பிரச்சினையில் வரலாற்று மிக்க தீர்ப்பு கிடைத்து உள்ளது. இந்த தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது ஜெயலலிதா எடுத்த முயற்சி. அதை செயல்படுத்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி செய்து உள்ளனர். நாம் என்னென்ன கேட்டோமோ அவை முழுமையாக தீர்ப்பில் வந்து இருக்கிறது.
காவிரி பிரச்சினையில் தி.மு.க. தமிழகத்துக்கு துரோகம் செய்து இருக்கிறது. போட்ட வழக்கை வாபஸ் செய்தது, ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியது, பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு, இந்த நதிநீர் பிரச்சினையை சரியான முறையில் கையாளாதது உள்பட பல்வேறு துரோகத்தை செய்து இருக்கிறது. தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஆர்ப்பாட்டம் என்ற நாடகத்தை தி.மு.க. நடத்த உள்ளது.
மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லைகாவிரி பிரச்சினை குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு எவ்வித அருகதையும் இல்லை. இந்த பிரச்சினையில் தி.மு.க. தமிழகத்துக்கு செய்த துரோகத்தை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் மிகத்தெளிவாக கூறி இருக்கிறார். எனவே தி.மு.க. நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.