மாவட்டத்தில் புதிதாக 12 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரம்


மாவட்டத்தில் புதிதாக 12 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 May 2018 2:15 AM IST (Updated: 21 May 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 12 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் குறைந்த மின் அழுத்தம் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது. இதையடுத்து மத்திய அரசின் தீன்தயாள் உபாத்யா கிராமஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் 9 துணை மின் நிலையங்களும், நகர்புற வளர்ச்சிக்காக 3 துணை மின் நிலையங்கள் என மொத்தம் 12 துணை மின் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கிராமப்பகுதிகளில் அமைய உள்ள 9 துணை மின் நிலையங்களில் 2 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள 7 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடலூர், பரங்கிப்பேட்டை மற்றும் புவனகிரி ஆகிய இடங்களில் 3 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுவதன் மூலம் குறைந்த மின் அழுத்த பிரச்சினை இருக்காது. பழுதடைந்த 20 மின் மாற்றிகளுக்கு பதிலாக புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நோக்கத்தில் மாவட்டத்தில் 164 கிராமங்களில் 49 ஆயிரத்து 607 எல்.இ.டி. பல்புகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.

புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களினால் மின்கம்பம், மின்மாற்றிகள், மின்சார வயர்கள் சேதம் அடைவதை தவிர்க்க மாவட்ட பேரிடர் மேலாண்மை இயக்கத்தின் பரிந்துரையின்பேரில் கடலூர் நகரில் உலகவங்கி நிதி உதவியுடன் ரூ.140 கோடியில் பூமிக்கடியில் மின்சார கேபிள் புதைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்டமாக இந்த திட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்காக நிலத்தை அளவீடு செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது. அடுத்து பூமிக்கடியில் பள்ளம் தோண்டி மின்சார கேபிளை புதைக்கும் பணி அடுத்த மாதம்(ஜூன்) இறுதியிலோ அல்லது ஜூலை முதல்வாரத்திலோ தொடங்கும்.

இதற்காக டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்து விட்டன. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை மேற்கொண்டு வரும் பிரபல தனியார் நிறுவனம் இந்த பணியை செய்து தர உள்ளது.

கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள கரையேறவிட்ட குப்பம், சான்றோர்பாளையம், புருகீஸ்பேட்டை, சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனாங்குப்பம், சாய்பாபாநகர், கோண்டூர், எஸ்.என்.சாவடி, அருந்ததியர்நகர், உப்பலவாடி, பூந்தென்றல்நகர், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, பெரியார்நகர், சங்கொலிகுப்பம், கிழக்கு கடற்கரைசாலை, குடிகாடு மற்றும் ஈச்சங்காடு ஆகிய பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

61.25 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர் மின் அழுத்த பாதை, 79.98 கிலோ மீட்டர் தூரத்துக்கு தாழ்வழுத்த மின் பாதை என மொத்தம் 141.23 கிலோ மீட்டர் தூரத்துக்கு பூமிக்கடியில் பள்ளம் தோண்டி மின்சார கேபிள் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story