போலி ஏ.டிஎம். கார்டு தயாரித்து மோசடி வழக்கு: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


போலி ஏ.டிஎம். கார்டு தயாரித்து மோசடி வழக்கு: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 May 2018 5:00 AM IST (Updated: 21 May 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார் அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: சாகர் மாலா திட்டத்தில் மீனவர்கள் பாதிக்கப்படுவோம் என கூறுகின்றனரே?

பதில்: சாகர் மாலா திட்டத்தில் மீனவர்கள் பயன்பெறுவர். முகத்துவாரத்தில் தேங்கி கிடக்கும் மணலை அள்ளினால்தான் மீனவர்களின் படகுகளும் செல்லும்.

கேள்வி: அரசு மருத்துவக்கல்லூரி கட்டணம் ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.1லட்சத்து 37 ஆயிரமாக உயர்த்தப்பட்டுவிட்டதே?

பதில்: சென்டாக் நிதியுதவி ரூ.2.25 லட்சம் தருகிறோமே. பிற மாநிலங்களில் எவ்வளவு வாங்குகின்றனர் தெரியுமா? அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை நடத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.80 கோடி செலவு செய்யப்படுகிறது.

கேள்வி: கடந்த ஆண்டு சென்டாக் நிதியுதவி இன்னும் தரவில்லையே?

பதில்: அதில் சில சிக்கல்கள் இருக்கின்றது, அதை சரி செய்து வரைவில் வழங்கப்படும்.

கேள்வி: பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறதே?

பதில்: காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 145 டாலராக இருந்தது. அப்போதே பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.68க்கு கொடுத்தோம். இப்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணை 85 டாலருக்கு தான் விற்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல் ரூ.78க்கு உயர்ந்துவிட்டது.

பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறியது. அந்த வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

கேள்வி: போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்த வழக்கில் இன்னும் பலர் கைது செய்யப்படாமல் உள்ளனரே?

பதில்: இந்த வழக்கில் இன்னும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் இதுவரை 90 சிம்கார்டுகளை மாற்றியுள்ளனர். விரைவில் கண்டுபிடிப்போம். குற்றவாளிகளை சி.ஐ.டி. போலீசார் நெருங்கி விட்டனர்.

கேள்வி: விசாரணை அதிகாரி மாற்றத்திற்கு என்ன காரணம்?

பதில்: அதிகாரி மாற்றம் என்னைக்கேட்டு செய்வதில்லை. அன்றாட நிர்வாகத்தில் நாங்கள் தலையிடுவதில்லை. ஒரு அதிகாரியை மாற்றுவது காவல்துறையின் செயல்பாடு.

கேள்வி: இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றும் வாய்ப்பு உள்ளதா?

பதில்: புதுச்சேரி சி.ஐ.டி. போலீசாரே சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள். எனவே சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story