கீழ்வேளூர் அருகே தனியார் பஸ்கள் மோதல்; 40 பேர் காயம்


கீழ்வேளூர் அருகே தனியார் பஸ்கள் மோதல்; 40 பேர் காயம்
x
தினத்தந்தி 21 May 2018 4:30 AM IST (Updated: 21 May 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூரில் தனியார் பஸ்கள் மோதி கொண்ட விபத்தில் 40 பேர் காயம் அடைந்தனர்.

கீழ்வேளூர்,

நாகையில் இருந்து கீழ்வேளூர் வழியாக திருவாரூருக்கு நேற்று மதியம் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கீழ்வேளூரை அடுத்துள்ள கூத்தூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. அப்போது தேவூரில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற மற்றொரு தனியார் பஸ், நின்று கொண்டிருந்த பஸ்சின் மீது மோதியது. இதில் 2 பஸ்களிலும் இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

40 பேர் காயம்

இந்த விபத்தில் நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பாலக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது25), கோகூரை சேர்ந்த பரமானந்தம் (30), புதுச்சேரியை சேர்ந்த ரவி (53), மன்னார்குடியை சேர்ந்த செந்தில் (38), தேவன்குடியை சேர்ந்த ராஜேந்திரன் (57), தேவூரை சேர்ந்த வசந்தி (45), வனஜா (28), மாரியம்மாள் (45), திருவாரூரை அடுத்த கல்யாணமகாதேவி பகுதியை சேர்ந்த சித்ரா (35), திருவாரூரை சேர்ந்த பரிமளா (28), கமலா (55), திருவாரூரை அடுத்த பழையவளத்தை சேர்ந்த கருப்பையன் (50), கள்ளிக்குடியை சேர்ந்த ரத்தினவேல் (80) உள்பட 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் லேசான காயமடைந்தவர்கள் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story