கரூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக போலீஸ் ஜீப்பில் அனுப்பி வைத்த அமைச்சர்


கரூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக போலீஸ் ஜீப்பில் அனுப்பி வைத்த அமைச்சர்
x
தினத்தந்தி 20 May 2018 11:00 PM GMT (Updated: 20 May 2018 9:48 PM GMT)

கரூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக போலீஸ் ஜீப்பில் அமைச்சர் அனுப்பி வைத்தார்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்லத்தில் நடந்த காதணி விழாவில் பங்கேற்க, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பழைய ஜெயங்கொண்டம் பகுதி வழியாக அமைச்சரின் கார் வந்து கொண்டிருந்தது. அதனை பின்தொடர்ந்தபடியே பாதுகாப்புக்காக போலீஸ் ஜீப் ஒன்றும் வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அவற்றில் வந்த கணவன்- மனைவி உள்பட 4 பேர் தவறி கீழே விழுந்து காயமடைந்ததால் வலியால் துடித்தனர்.

இதனை கண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக தனது காரை நிறுத்தி கீழே இறங்கி, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்புமாறு தனது பாதுகாப்புக்காக வந்த போலீசுக்கு உத்தரவிட்டார். அப்போது மீட்பு பணியின் போது, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினார். பின்னர் உடனடியாக போலீஸ் ஜீப்பில் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன் பின்னர் அமைச்சர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story