ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 20 May 2018 9:51 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின்போது, நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆழிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். இதையொட்டி அந்த மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டு நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.

விழாவின் 7-ம் நாளன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவது சிறப்பம்சமாகும். வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும்.

வசந்த உற்சவத்தின் போது 28-ந் தேதி அன்று விஸ்வரூபசேவை கிடையாது. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை விஸ்வரூப சேவையும், காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரையும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

முன்னதாக நம்பெருமாள் வசந்த உற்சவத்தையொட்டி மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நேற்று நீர் நிரப்பப்பட்டது. மேலும் அந்த மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

Next Story