பா.ஜ.க.-காங்கிரஸ் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகம்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு


பா.ஜ.க.-காங்கிரஸ் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகம்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 May 2018 4:45 AM IST (Updated: 21 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் பா.ஜ.க.வும், காங்கிரசும் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகின்றன என்று ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.


திண்டுக்கல்,

எதிரும், புதிருமாக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் பா.ஜ.க.வும், காங்கிரசும் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகின்றன என்று ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.

திண்டுக்கல்லில் நடந்த ஒரு திருமண விழாவில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நீண்ட காலமாக போராடிய தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அனைத்திலும் எதிரும், புதிருமாக உள்ள பா.ஜ.க.வும், காங்கிரசும் காவிரி விவகாரத்தில் மட்டும் ஒன்று சேர்ந்துகொண்டு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகின்றன.

உறுப்பினர்களை விரைவாக நியமித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒரு சில நாட்களில் அதனை அரசிதழிலும் வெளியிட வேண்டும். டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும். வறட்சியின் விளிம்பில் தமிழகம் உள்ளதால், ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயராத நிலையில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் உயர்வது ஏன்? என்று தெரியவில்லை. இதனால் பெட்ரோல், டீசலையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநில கவர்னர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் மக்களை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது. அந்த திட்டங்கள் குறித்து முதலில் பொதுமக்களுக்கு முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு, பின்னர் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story