குற்றாலத்தில் ஜூன் 1-ந் தேதி சீசன் தொடங்குமா?


குற்றாலத்தில் ஜூன் 1-ந் தேதி சீசன் தொடங்குமா?
x
தினத்தந்தி 21 May 2018 4:20 AM IST (Updated: 21 May 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் ஜூன் 1-ந் தேதி சீசன் தொடங்குமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

தென்காசி,

தென் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான, ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் குற்றாலம் நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். ஜில்லென்று குளிர்ந்த காற்று வீசும். இடையிடையே இதமான வெயிலும் அடிக்கும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.

இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்வார்கள். மற்ற அருவிகளில் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் இங்கு 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழலாம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான மூலிகைச் செடிகள் இருப்பதால் இதன் மீது தண்ணீர் தவழ்ந்து விழுவதால் இதற்கு மூலிகை குணம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குற்றாலம் அருவிகளில் குளிப்பது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குற்றாலத்தில் சீசன் பல ஆண்டுகளுக்கு முன்பு 3 மாதங்களும் மிகவும் சிறப்பாக இருந்து வந்தது. அதன் பிறகு சிறிது சிறிதாக மழையின் அளவு குறைந்து சீசன் டல் அடித்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லாமல் சீசன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். சீசனை நம்பியே வாழ்ந்து வரும் வியாபாரிகள் மிகுந்த நஷ்டம் அடைந்தனர். தற்போது குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கமே குற்றாலம் பகுதியில் இல்லை. கடந்த சில நாட்களாக குற்றாலம் மெயின் அருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழுந்தது.

வருகிற 29-ந் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி 29-ந் தேதி மழை பெய்ய தொடங்கினால் குற்றாலத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கிவிடும். தொடர்ந்து சாரல் மழை பெய்யும் போது ஜூன் 1-ந் தேதி சீசன் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. எனவே ஜூன் 1-ந் தேதி சீசன் தொடங்கும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். வியாபாரிகளும் கடைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Next Story