திருவண்ணாமலை பஸ் நிலையத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்: பயணிகள் கோரிக்கை


திருவண்ணாமலை பஸ் நிலையத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்: பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 May 2018 4:21 AM IST (Updated: 21 May 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை பஸ் நிலையத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கும், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதனால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பயணிகள் கூட்டம் காணப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ் நிலையத்தில் சேதங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

இருப்பினும் இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகளுக்கு நிழலுக்காக கட்டப்பட்டு உள்ள நிழற் கூரையின் மேல் பகுதி சேதம் அடைந்து சில இடங்களில் விரிசல் விட்டும் காணப்படுகின்றன. ஆங்காங்கே சில இடங்களில் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து கம்பிகள் வெளியே தென்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தில் திருக்கோவிலூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் நிழற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் உடைந்து விழுந்தது. இதில் பயணி ஒருவர் காயமடைந்தார். பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டு ஓரிரு மாதங்களே ஆன நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சிமெண்டு பூச்சுகள் விழுந்த இடத்தில் கம்புகள் கொண்டு சாரம் கட்டப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகிறதாம். ஆனால் எந்தவித பணியும் நடைபெறாமல் உள்ளதால், இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்று பயணிகள் கூறுகின்றனர். எனவே, திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள நிழற்கூரையின் மேல் கூரைகள் சேதமடைந்து காணப்படுவதால், பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story