தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கைது 92 பவுன் நகைகள்- ரூ.7 லட்சம் மீட்பு


தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கைது 92 பவுன் நகைகள்- ரூ.7 லட்சம் மீட்பு
x
தினத்தந்தி 21 May 2018 4:36 AM IST (Updated: 21 May 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 92 பவுன் நகைகள், ரூ.7 லட்சத்தை மீட்டனர்.

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, அம்பை, தேவர்குளம், நெல்லை டவுன் ஆகிய பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் கெட்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் பனவடலிசத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். விசாரணையில், வாசுதேவநல்லூர் பாலசுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வனராஜ் மகன் செல்வகுமார் (வயது 30) என்பதும், இவர்பல்வேறு கொள்ளை சம்பவங்கள், வழிப்பறியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த பூச்சி என்ற மாரிச்சாமி (30), நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே நம்பித்தலைவன்பட்டயத்தை சேர்ந்த சிவபெருமாள் மகன் சுரேஷ் (28), தெற்கு பனவடலிசத்திரத்தை சேர்ந்த கொடுங்குசாமி (50), திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகேயன் (39) ஆகியோருடன் சேர்ந்து செல்வகுமார் நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் பல்வேறு வழக்குகளில் கைதாகி ஏற்கனவே ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போது, அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வழக்கில் இருந்து விடுதலையாகி வெளியே வந்ததும் மீண்டும் 5 பேரும் சேர்ந்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர். பாப்பாக்குடியில் இருந்து செல்வகுமார் கார் ஒன்றை திருடிக் கொண்டு அதில், ‘பத்திரிகையாளர்’ என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார்.

இதுதொடர்பாக சங்கரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.19 லட்சம் மதிப்பிலான 92 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, 2 கார்கள், ரூ.7 லட்சம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

Next Story