மனு கொடுக்க வந்த 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


மனு கொடுக்க வந்த 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 May 2018 3:15 AM IST (Updated: 22 May 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைகேட்புக்கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த இரு வாரங்களாக தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடந்ததால் மக்கள் குறைகேட்புக்கூட்டம் நடத்தப்படவில்லை. இரு வாரங்களுக்குப்பின்னர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குறை கேட்புக் கூட்டம் நடந்தது.

இதனால் மனு கொடுக்க ஏராளமானவர்கள் வந்திருந்தனர். இதில் நெய்வேலி 28-வது வட்டத்தைசேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மனைவி துர்கா(வயது 37) என்பவரும் மனு கொடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை தாசில்தார் சிவா மற்றும் அதிகாரிகள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். குடும்ப பிரச்சினை தொடர்பாக அவர் மனு கொடுக்க வந்திருந்தாராம். அவரது கோரிக்கை தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் அருண்மொழி கிராமத்தை சேர்ந்த கேசவன் என்பவரது மனைவி அருமைதேவி(80) என்பவரும் மனு கொடுக்க வரிசையில் வரும் போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கிவிட்டு முகத்தில் தண்ணீர் தெளித்தனர். அதன்பின் அருமை தேவி மயக்கம் தெளிந்து எழுந்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

ராஜேந்திர பட்டினத்தில் இருந்து மனு கொடுப்பதற்காக பாலசுப்பிரமணியன் (வயது52) என்பவரும் வந்திருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவரது வீட்டுக்கு யாரோ தீவைத்து எரித்து விட்டனராம். இதனால் ஊரை காலி செய்து விட்டு சென்ற பாலசுப்பிரமணியன் திரும்பி வந்து பட்டா கேட்டு தாசில்தாரிடம் மனு கொடுத்தாராம் ஆனால் இதுவரை தாசில்தார் பட்டா கொடுக்கவில்லையாம். இதனால் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருந்த அவர் திடீரென தாசில்தாரை கண்டித்து முழக்கமிட்டபடியே ஜிந்தாபாத், ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story