ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தர வேண்டும்


ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தர வேண்டும்
x
தினத்தந்தி 22 May 2018 3:33 AM IST (Updated: 22 May 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

ராமம்பாளையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு தனியார் ஆங்கில பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் இந்த திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறதா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் ஒரு குழு அமைத்து இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

தலித் விடுதலை கட்சியினர் கொடுத்த மனுவில் “நல்லூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 1.95 ஹெக்டேர் நிலம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்பட 7 பேர் விற்பனை செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

வீரபாண்டி 2-வது வீதியை சேர்ந்த பவானி என்பவர் தனது குடும்பத்தினருடன் கொடுத்த மனுவில் “எனது கணவர் கட்டிட காண்டிராக்டராக இருக்கிறார். மேலும், நாங்கள் கட்டிடம் கட்டுவதற்கான சென்டிரிங் பொருட்களை வாடகைக்கு கொடுக்கும் தொழில் செய்து வருகிறோம். புதிய வீடு கட்டுவதற்காக திருப்பூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் கடன் பெற்றோம். தொழில் சரியாக செல்லாததால் வங்கி தவணையை சரியாக செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆடிட்டர் ஒருவர் மற்றும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கி மேலாளர் ஆகிய இருவரும் சேர்ந்து கடன் வாங்கி தருவதாக கூறி என் பெயர் மற்றும் எனது கணவர் பெயரில் தலா ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் கடன் பெற்றுக்கொண்டு எங்களுக்கு தராமல் மோசடி செய்துள்ளனர். மேலும், என் கணவர் பெயரில் இருந்து சொத்தை என் பெயருக்கு மாற்றி நான் வாங்குவது போல் ஆவணங்கள் தயாரித்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணத்தை மீட்டு தர வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

அலகுமலை ஊராட்சி ராமம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வடக்கு பகுதியில் அரசு சார்பில் கழிவுநீர் குட்டை அமைத்து கொடுக்கப்பட்டது. அதன் அருகே உள்ள நிலத்தில் கோவில் திருவிழா காலங்களில் சாமி ஊர்வலம் சென்று வந்தோம். ஆனால் தற்போது அந்த குட்டையையும், நிலத்தையும் தனியார்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில் “திருப்பூர் மின்வாரியத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடந்து வருகிறது. திருப்பூர் சாமுண்டிபுரம், பூலுவப்பட்டி, பாண்டியன், ஆர்.கே.நகர் உள்பட பல பிரிவு அலுவலகத்திற்கு பல்வேறு இடங்களில் மின்வாரிய அதிகாரிகள் எந்தவொரு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் வழங்கப்பட்ட மின் இணைப்புகள் மற்றும் மின்கம்பங்களால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கொடுத்த மனுவில் “திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகருக்கு கொலை மிரட்டல் கடிதம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பெயரில் வந்துள்ளதாக பொய்புகார் அளித்த இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 14-வது வார்டு தாய்மூகாம்பிகை காலனியில் குடிநீர் தொட்டி கட்ட பணிகள் ஆரம்பித்து இன்னும் முடியாமல் இருந்து வருகிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், வ.உ.சி.நகர் முதல் குமார்நகர் வரை உள்ள மெயின்ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்து முன்னணியினர் கொடுத்த மனுவில் “திருமுருகன்பூண்டி 6-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் ஒருவர் தொழிற்சாலை அமைக்க அனுமதி வாங்கிக்கொண்டு தொழுகை கூடம் அமைத்து, பாடசாலையையும் நடத்தி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

Next Story