குடியாத்தத்தில் மகளை கொன்று தாய் தற்கொலை உணவில் விஷம் கலந்து கொடுத்தாரா?


குடியாத்தத்தில் மகளை கொன்று தாய் தற்கொலை உணவில் விஷம் கலந்து கொடுத்தாரா?
x
தினத்தந்தி 22 May 2018 4:30 AM IST (Updated: 22 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். உணவில் விஷம் கலந்து கொடுத்து மகளை கொன்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை லிங்கன்னதெருவை சேர்ந்தவர் ராஜராஜன், முன்னாள் ராணுவவீரர். தற்போது நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 45). இவர்களுக்கு நர்மதா (21), சவுபர்னிகா (13) என 2 மகள்கள் உள்ளனர். நர்மதா வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சவுபர்னிகா 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலையில் ராஜராஜன் நிதிநிறுவன வேலை சம்பந்தமாக கர்நாடகா மாநிலம் முல்பாகலுக்கு சென்றிருந்தார். நர்மதா கல்லூரிக்கு சென்று விட்டார். வீட்டில் லட்சுமியும், இளைய மகள் சவுபர்னிகாவும் இருந்துள்ளனர். காலை 10 மணி வரை அக்கம் பக்கத்தினரிடம் பேசி கொண்டிருந்தனர். அதன் பின்னர் வெளியே வரவில்லை.

பிற்பகல் 3 மணி அளவில் கல்லூரி முடித்து நர்மதா வீட்டிற்கு வந்தபோது வீட்டில் ஒரு அறையில் தாய் லட்சுமி தூக்கிட்ட நிலையிலும், தங்கை சவுபர்னிகா தரையில் இறந்த நிலையிலும் கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நர்மதா கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, விஜயகுமார், ஏட்டு பாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று தாய்-மகள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது வீட்டில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் லட்சுமி தனக்கு வயிற்றுவலி அதிகமாக இருப்பதால் இந்த முடிவை எடுப்பதாகவும், சின்ன மகளை யாருக்கும் பாரமாக்க விரும்பவில்லை. பெரிய மகளை சென்னையில் உள்ள அம்மா வீட்டில் விடவும் என எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், லட்சுமி தனது மகள் சவுபர்னிகாவிற்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story