குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் மனு கலெக்டரிடம் வழங்கினர்


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் மனு கலெக்டரிடம் வழங்கினர்
x
தினத்தந்தி 22 May 2018 4:15 AM IST (Updated: 22 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

நஞ்சகாலகுறிச்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அப்போது முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மொத்தம் 223 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் கே.பேட்டை கிராமத்தை சேர்ந்த ஆயிப்பொன்னு என்பவரது குடும்பத்தினர் வந்து கொடுத்த மனுவில், நாங்கள் எங்கள் பகுதியில் உள்ள மண் வீட்டை இடித்து விட்டு அரசிடமிருந்து பெறப்பட்ட அனுமதி சான்றிதழுடன் தொகுப்பு வீடு கட்டும் பணியை மேற்கொண்டோம். அப்போது அஸ்திவாரம் தோண்டும் போது அந்த இடம் தனக்கு சொந்தமானதாக கூறி ஒருவர் தகராறு செய்து வருகிறார். இதனால் நாங்கள் குடியிருக்க இடம் இல்லாமல் கோவில் மரத்தடியில் தங்கி இருக்கிறோம். எனவே இந்த பிரச்சினையில் உரிய தீர்வு காணப்படாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தனர். அரவக்குறிச்சி அருகே நஞ்சகாலகுறிச்சியை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்டோர் குறித்த நேரத்தில் காலையில் புறப்பட்டு செல்ல முடிவதில்லை. எனவே எங்கள் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அரவக்குறிச்சி தாலுகா கோடந்தூர் தெற்கு கிராமம் மூலத்துறை நாச்சிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் புதிதாக கல்குவாரிக்கு உரிமம் வழங்க ஏற்பாடு நடப்பதாக தெரிகிறது. இந்த கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் வெட்டி எடுக்கப்படும் போது வீடுகளில் அதிர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் ஆழ்குழாய் கிணறுகளில் நீரின் தன்மையும் மாசுபடக்கூடும். இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.

வெள்ளியணை தென்பாகம் அருகேயுள்ள வடக்கு மேட்டுபட்டி, தெற்குமேட்டுபட்டி, நடுமேட்டுபட்டி ஆகிய பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கிடைப்பதில்லை. இங்கு குடிநீரை சேமித்து வைப்பதற்கான தொட்டிகள் கட்டப்பட்டு அப்படியே உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருந்தனர்.

கரூரில் செருப்பு தைத்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், கரூர் அரசு ஆஸ்பத்திரி ரோடு உள்ளிட்ட இடங்களில் பெட்டிக்கடை மூலம் செருப்பு தைத்து நாங்கள் வாழ்க்கை நடத்தி வருகிறோம். தற்போது சில காரணங்களை கூறி நகராட்சி நிர்வாகத்தினர் எங்களது கடையை காலி செய்ய வலியுறுத்துகின்றனர். எனவே நகராட்சி வளாகம் அருகே உள்ள பெட்டி கடைகளுக்கு இடையே சிறிது இடம் உள்ளது. எனவே அதனை முறைப்படுத்தி எங்களது செருப்பு கடையையும் அங்கு செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் அருகே தென்னிலை தெற்கு செஞ்சேரிவலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக எங்கள் பகுதியில் மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடக்கிறது. இந்த திட்டத்திற்கான கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே கோவில்கள், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கிணறு ஆகியவை உள்ளன. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பிருப்பதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். கிருஷ்ணராயபுரம் மணவாசியை சேர்ந்த கோவிந்தம்மாள், பாவனா ஆகிய திருநங்கைகள் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தனர். மனுக்கள் அனைத்தையும் பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் கொடி நாள் நிதிசேகரிப்பில் இலக்கை விட கூடுதலாக ரூ.1 லட்சம் அதிகமாக சேகரித்த பள்ளப்பட்டி செயல் அலுவலர் உமாராணியை மாவட்ட கலெக்டர் பாராட்டி வரைவோலை பெற்றுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட ஆதிதிராவிடர் நலஅதிகாரி பாலசுப்பிமணியம் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story