பூட்டியே கிடக்கும் சமுதாயக்கூடம் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை


பூட்டியே கிடக்கும் சமுதாயக்கூடம் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
x
தினத்தந்தி 22 May 2018 4:17 AM IST (Updated: 22 May 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

பேரையூர் அருகே புதிதாக கட்டியதில் இருந்தே பூட்டியே கிடக்கும் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது ராவுத்தம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த 2009-10 ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதில் கிராம மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

மேலும் இங்கு கிராமசபை கூட்டம் உள்பட பல்வேறு வகையான அரசு நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன. இந்தநிலையில் இந்த சமுதாயக்கூடம் கட்டிய 2 மாதங்கள் மட்டுமே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வந்தது. அதன்பின்பிலிருந்து தற்போது வரை பூட்டியே கிடக்கிறது.

இதனால் சமுதாயக்கூடத்தின் இன்றைய நிலை என்னவென்றால், கட்டிடத்தின் ஜன்னல், கதவுகள் காணாமல் போய்விட்டன. குடிமகன்களின் கும்மாளமும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும் சமுதாயக்கூடம் உள்ளது. மேலும் பாழடைந்த கட்டிடமாகவும், காட்சி பொருளாகவும் காணப்படுகிறது.

மின்சார வசதி துண்டிக்கப்பட்ட நிலையில் பராமப்பின்றி உள்ளது. பொது மக்களின் நலன் கருதி கிராமத்தில் கட்டிய கட்டிடம் கேட்பாறின்றி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஒன்றிய நிர்வாகம் இந்த சமுதாயக்கூடத்தை சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதேபோல மேலூர் நகராட்சியின் முதல் வார்டில் உள்ளது பழையசுக்காம்பட்டி. இங்கு புதிதாக ஒரு அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்காக கட்டிடத்தில் வாழைமரம் கட்டி திறப்பு விழா ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது அங்கு வந்த ஒரு அரசியல் கட்சியினர் திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அந்த அங்கன்வாடியை திறக்காமல் திரும்பி சென்றுவிட்டனர். அங்கன்வாடி திறப்பு விழாவை தடுத்து நிறுத்தி குழந்தைகளை படிக்க முடியாமல் செய்ததற்காக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்ததோடு, அங்கன்வாடியை திறக்கக் கோரி போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Next Story