டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சயான் மாநகராட்சி மருத்துவமனை பயிற்சி டாக்டர்களும் வேலை நிறுத்தம்: நோயாளிகள் பாதிப்பு
டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியை தொடர்ந்து, சயான் மாநகராட்சி மருத்துவமனை பயிற்சி டாக்டர்களும் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
மும்பை,
மராட்டியத்தில் நோயாளிகளின் உறவினர்களால் டாக்டர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளும் சூறையாடப்படுகின்றன. அண்மையில் மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் 2 பேர், உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்கள் டாக்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் 2 நாட்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்தனர்.
பணியின்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். மேலும் நேற்று வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
இந்தநிலையில், ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சயான் மாநகராட்சி மருத்துவனை பயிற்சி டாக்டர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவ சேவை முற்றிலுமாக முடங்கியது.
இதனால் புறநோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகினர். கடந்த ஆண்டு மராட்டியத்தில் அடிக்கடி நோயாளிகளின் உறவினர்களால் டாக்டர்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவங்கள் நடந்தேறின. இதையடுத்து, டாக்டர்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story