ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது


ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 22 May 2018 5:37 AM IST (Updated: 22 May 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ஈரோடு, 

ஈரோடு பழையபாளையத்தில் இருந்து நாராயணவலசு செல்லும் ரோட்டில் நேற்று காலை ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அவருடைய மோட்டார் சைக்கிளின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளிவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். சிறிதுநேரத்தில் என்ஜினில் தீப்பிடித்து, அது மோட்டார் சைக்கிள் முழுவதும் பரவியது.

தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதியை சுற்றிலும் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. அந்த வழியாக கார், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களும் சிறிது தூரத்திற்கு முன்பே வாகனத்தை நிறுத்தினார்கள். 10 நிமிடங்கள் வரை மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டு இருந்தது.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீடுகளில் இருந்து பாத்திரங்களை கொண்டு வந்து, அதில் மண்ணை நிரப்பி மோட்டார் சைக்கிளின் மீது போட்டு தீயை அணைத்தனர். அதன்பின்னரும் தொடர்ந்து புகை வந்துகொண்டு இருந்ததால் அருகில் உள்ள மரத்தின் கிளைகளை பயன்படுத்தி முழுமையாக தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து நாசமானது.

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story