சந்துருஜியுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் யார், யார்?


சந்துருஜியுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் யார், யார்?
x
தினத்தந்தி 22 May 2018 5:41 AM IST (Updated: 22 May 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான சந்துருஜியுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் யார், யார்? என்பது குறித்து அவருடைய உதவியாளரிடம் சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மற்றவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சேகரித்து அதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்தது தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் லாஸ்பேட்டை லட்சுமிநகர் பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கம் சந்துரு (30) உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது இந்த மோசடியில் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பது அம்பலமானது. மேலும் முத்தியால்பேட்டை அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் சந்துருஜி, முதலியார்பேட்டை என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோருக்கும் மேலும் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் முக்கிய குற்றவாளிகளான சந்துருஜி, சத்யா ஆகியோர் வெளிமாநிலங்களில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. சி.ஐ.டி. போலீசார் 3 தனிப்படை அமைத்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே சத்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தநிலையில் முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து கடந்த 20-ந்தேதி நடக்க இருந்த அவரது திருமணமே ரத்து செய்யப்பட்டது.

ஆனால் அடிக்கடி அவர்கள் இருப்பிடத்தை மாற்றி வருகின்றனர். இதற்கிடையே அவர்கள் இதுவரை 90 சிம்கார்டுகள் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து சந்துருஜி போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். கோட்டக்குப்பம் அருகே சந்திராயன்குப்பத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ஓட்டல், நிறுவனங்களுக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டது. இதற்கிடையே அவரது பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர்.

இந்த நிலையில் அவரது உதவியாளர் மகி என்பவரை பிடித்து சி.ஐ.டி. போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம், சந்துருஜி எங்கு தலைமறைவாக உள்ளார்? அவருக்கு அடைக்காலம் கொடுத்தவர்கள் யார்? யார்?. ஏ.டி.எம். மோசடி மூலம் கொள்ளையடித்த பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார்? அவருக்கு நெருங்கிய தொடர்புடைய அரசியல்வாதிகள் யார்? யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story