தினம் ஒரு தகவல் : சாப்பிடும்போது பேசாதீர்கள்!
சாப்பிடும்போது பேசக் கூடாது. உணவை ரசித்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
பெரியோர்கள் சொல்லுக்கு விஞ்ஞான பூர்வமாகவும் விளக்கம் கிடைத்திருக்கிறது. அதற்கு மனித முகத்தின் வடிவமும் ஒரு காரணம் என்கிறது. மனித முகத்தில் மண்டை ஓட்டின் அமைப்பு கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது மருத்துவம். இந்தத் தொண்டையை மேலும் 3 பகுதிகளாக பிரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
அதன்படி தொண்டையை முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை என்று 3 வகைப்படுத்துகிறார்கள். வாயிலிருந்து உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயை கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராஸிங் போல செயல்படுகிறது.
சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். அதேபோல்தான் சுவாசப்பாதை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க்கொண்டிருக்கும்.
உணவுப் பாதை ரெயில்வே பாதை போல எப்போதாவதுதான் அதில் ரெயில் வரும். ஆனால் ரெயில் வரும்போது சாலை மூடப்படும். அப்படித்தான் உணவு வரும்போது, அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக்கொள்ளும். உணவு கடந்து போனதும் மீண்டும் திறந்து கொள்ளும்.
இதற்காக கதவு போன்ற அமைப்பு இருக்கிறது. இதனால் உணவுக்குழாய்க் குள் காற்றோ, சுவாசக்குழாய்க்குள் உணவோ போய்விடாமல் தடுக்கப்படுகிறது. ஆனால் நாம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது சுவாசக்குழாய் திறக்கும்.
சுவாசக்குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும்போது சுவாசக்குழாய்க்குள் உணவுப்பொருள் தவறாக நுழைந்துவிடும். அதை வெளியே தள்ளுவதற்காக சுவாசக்குழாய் வேகமான ஒரு விசையை உருவாக்கும். அதைத்தான் புரையேறுதல் என்கிறார்கள்.
மருத்துவர்கள் இதனை வாட்ச்டர்க் மெக்கானிஸம் என்கிறார்கள். இந்தப் புரையேறுதல் சாப்பிடும்போது மட்டுமல்ல, சிலசமயங்களில் தூங்கும்போதும் கூட ஏற்படுகிறது. அசந்து தூங்கும்போது சிலசமயம் நம்மையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக்குழாய்க்குள் நுழைந்து விடும்.
மனிதர் தூக்கத்தில்தானே இருக்கிறார் என்று சுவாசக்குழாய் சும்மா இருந்துவிடாது. உடனே அந்த உமிழ்நீரை வெளியே தள்ளும். இதைத்தான் தூக்கத்தில் புரையேறுதல் என்கிறார்கள். இப்படி சுவாசக்குழாய்க்கும் உணவுக்குழாய்க்கும் நேரடி தொடர்பு இருப்பதால் தான் சாப்பிடும்போது பேசக்கூடாது என்கிறார்கள்.
தூங்கும்போது நடக்கும் மற்றொரு முக்கியமான நிகழ்வு குறட்டை, விழித்திருக்கும்போது தாடை சதைகள் கெட்டியாக இருக்கும். தூங்கும்போது இந்தக் கெட்டித்தசை தளர்ந்து விடும். ஆழ்ந்த தூக்கத்தில் முழுமையாக கட்டுப்பாடு இழந்து சுவாசக்குழாயின் மேல் விழுந்து அழுத்தும். இதனால் தடங்கல் உண்டாகி காற்றுப்போகும் முயற்சி தடைபடும்.
Related Tags :
Next Story