எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நாணய கண்காட்சி


எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நாணய கண்காட்சி
x
தினத்தந்தி 23 May 2018 4:00 AM IST (Updated: 23 May 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் நாணய கண்காட்சியில் சோழர் கால நாணயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சர்வதேச அருங்காட்சியக விழா கடந்த 19-ந் தேதி முதல் நாளை (24-ந் தேதி) வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சர்வதேச அருங்காட்சியக விழா நடைபெற்று வருகிறது.

இதில் சோழர் காலத்தில் புழக்கத்தில் விடப்பட்ட முத்திரை நாணயங்கள் முதல் உலோக நாணயங்கள் வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து பார்வையாளர்களுக்கு உதவி காப்பாட்சியர் சுந்தர்ராஜன் விளக்கி கூறினார். அதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கேட்டு நாணயங்கள் பற்றி தெரிந்து கொண்டனர். அருங்காட்சியகத்தில் நாணயவியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளவை பற்றிய விவரம் வருமாறு.

அரைப்படி, கால்படி, உழக்கு, அரை உழக்கு, கால் உழக்கு என்று அளக்கப்பயன்படுத்திய மற்றும் பயன்படுத்துகிற அளவைகளும், எடைகளும் இடம் பெற்றுள்ளன. அரிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் ஆகியவையும் வைக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் முதல் முதலாக முத்திரை நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக சோழ மன்னர்கள் பயன்படுத்திய முத்திரை நாணயங்கள் மற்றும் நாணயங்கள் இடம் பெற்று உள்ளன. இதேபோல் கிரேக்கர்களின் பதக்கமும், கஜினி முகமதுவின் பதக்கமும் உள்ளன.

ரூபாய் நோட்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள், பழமையான ஆயிரம் ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500, 100, 50, 20, 10, 5, 2, 1 ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றன. ஒரு பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, ஒரு அணா, 10 பைசா, 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் ஆகிய நாணயங்கள் இடம் பெற்றன. அவற்றில் பெரும்பாலானவை அசலானவை.

இதில் தபால் தலை கண்காட்சியும் இடம் பெற்றது. நாணய மற்றும் தபால் தலை கண்காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இப்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகளும் திரளாக வந்து ரசித்தனர்.

Next Story