தாம்பரத்தில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது


தாம்பரத்தில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2018 4:30 AM IST (Updated: 23 May 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாம்பரம்,

சென்னையை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூதன முறையில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. இதுதொடர்பாக தாம்பரம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

அந்த தனிப்படை போலீசார் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சம்பவங்கள் தொடராத வண்ணம் அந்த பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் வழிப்பறி சம்பவங்கள் நடந்த இடங்கள் மற்றும் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளின் உருவங்கள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு(வயது 50) மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா(37) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் குரோம்பேட்டை பச்சைமலை பகுதியில் பதுங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் குரோம்பேட்டை பச்சைமலை பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். விசாரணையின்போது இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் சந்துரு மற்றும் ராஜாவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இருவரும் இதுபோல் வேறு எந்த இடங்களிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story