தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்
தூத்துக்குடியில் உள்ள ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராகவும், அந்த ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் அங்குள்ள மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
நேற்று 100-வது நாளாக நடந்த இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தை ஒடுக்க போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 9 பேர் பலியாகினர்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் விழுப்புரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், மருதம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிகார்த்திகேயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும், ‘ஸ்டெர்லைட்’ ஆலையை உடனே மூடக்கோரியும், தூத்துக்குடி மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்யக்கோரியும், எடப்பாடி பழனிச்சாமி அரசை பதவி விலகக்கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோஷம் எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் ஞானவேல்ராஜா, ஞானஒளி, தொல்காப்பியன், இளவேந்தன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். சிலர் தங்களது குழந்தைகளுடனும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
உடனே விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், விவேகானந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 32 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story