ஆண்டிப்பட்டி பகுதியில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரிப்பு
ஆண்டிப்பட்டி பகுதியில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தில் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் மே மாத இறுதியில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி விடும். அந்த நேரத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படும் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரிக்கும்.
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி உள்ளது. இதனையடுத்து காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் தொடங்கியது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் ஒரு வினாடிக்கு 8 மீட்டர் முதல் 9 மீட்டர் என்ற அளவில் உள்ளதாக காற்றாலை பணியாளர்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது, தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினர்.நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு காற்று வீசத் தொடங்கியதால், காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையில் ஒரு காற்றாலையின் மின்சார உற்பத்தி 16 ஆயிரம் யூனிட் என்ற அளவில் காணப்பட்டது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகமும், காற்றாலை மின்சார உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் மின்வாரியத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story