திருவண்ணாமலையில் வனத்துறை சார்பில் உயிரி பன்ம பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


திருவண்ணாமலையில் வனத்துறை சார்பில் உயிரி பன்ம பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 23 May 2018 3:45 AM IST (Updated: 23 May 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் வனத்துறை சார்பில் உயிரி பன்ம பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை,

தமிழ்நாடு வனத்துறை சார்பில் அரியவகை தாவரங்கள், மரங்கள், வன விலங்குகளை பாதுகாக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 22-ந் தேதி உயிரி பன்ம பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உயிரி பன்ம பாதுகாப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை வேலூர் மாவட்ட தலைமை வனப் பாதுகாவலர் தேவசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர் அர்ச்சனாகல்யாணி முன்னிலை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று வனத்துறை அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய வனத்துறை அலுவலர்களுக்கும், காட்டு தீயின்போது அதனை அணைக்க உதவிய தன்னார்வலர்களுக்கும், கடந்த 19-ந் தேதி நடைபெற்ற வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Next Story