திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருட்டு நடந்த ஆசிரமத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. விசாரணை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருட்டு நடந்த ஆசிரமத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலையில் திருஅருட்பா மடம் என்ற தனியார் ஆசிரமம் உள்ளது.
இந்த ஆசிரமத்தில் அதன் நிர்வாகி கலைநம்பியும் (வயது 77), அங்கு பணியாற்றும் பாலம்மாள் (63) என்ற மூதாட்டியையும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கட்டி போட்டு தாக்கி உள்ளனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோக்களின் பூட்டை உடைத்து, அதில் இருந்து ரூ.5 ஆயிரத்தையும், மூதாட்டியிடம் இருந்து 2 பவுன் நகையும் திருடி கொண்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த கலைநம்பி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியில் இருந்து 9.30 மணி வரை கலைநம்பி மற்றும் பாலம்மாளிடம் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, அசோக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் ஆசிரமத்தை பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா கூறுகையில், ‘இந்த சம்பவம் உள்நோக்கத்துடன் நடைபெற்று உள்ளது போன்று உள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்’ என்றார்.
Related Tags :
Next Story