பள்ளி வாகனங்களை சரியாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர் ராமன் எச்சரிக்கை
பள்ளி வாகனங்களை சரியாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்தார்.
காட்பாடி,
கோடை விடுமுறை முடிந்து வருகிற 1-ந் தேதி மீண்டும் பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பை உறுதிசெய்ய ஆண்டுதோறும் தனியார் பள்ளி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதன்படி இந்தாண்டு நேற்று வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 170 தனியார் பள்ளிகளின் 615 வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி காட்பாடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதற்காக தனியார் பள்ளி வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டன.
கலெக்டர் ராமன் தலைமையில் உதவி கலெக்டர் செல்வராசு, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ராஜசேகர், மோகன், சிவராமன், விஜயகுமார் ஆகியோர் பள்ளி வாகனங்களை வரிசையாக ஆய்வு செய்தனர்.
அப்போது வாகனங்களில் தரமான டயர் பொருத்தப்பட்டுள்ளதா?, முதலுதவிப்பெட்டி உள்ளதா?, மாணவர்கள் ஏறும் வகையில் படிக்கட்டுகள் உள்ளதா?, தீயணைக்கும் கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, அவசரக்கதவு உள்ளதா?, பள்ளி குறித்த விவரம், பிரேக் திறன் உள்பட 16 வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மொத்தம் 338 பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 70 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வுகள் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அந்த வாகனத்திற்கு தகுதிச்சான்று வழங்கப்படாது. குறைபாடு உடைய வாகனங்கள் உடனடியாக குறைகளை நிவிர்த்தி செய்து பள்ளி திறப்பதற்கு முன்பாக மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி தகுதிச்சான்று பெற வேண்டும். அதன் பின்னர்தான் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்ல வேண்டும்.
தகுதிச்சான்று பெறாத வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றால், அந்த வாகனத்தின் ‘பெர்மிட்’ ரத்து செய்யப்படும். பள்ளி வாகனங்களை சரியான முறையில் பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story