ஈரோட்டில், சூறாவளிக்காற்றுடன் மழை: 3 இடங்களில் மரம் விழுந்தது
ஈரோட்டில், சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததால் 3 இடங்களில் மரம் விழுந்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. அதைத்தொடர்ந்து இரவில் வானில் கருமேகங்கள் திரண்டன. இரவு 8.30 மணி அளவில் சூறாவளிக்காற்றுடன் மழையும் பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1½ மணிநேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் சூறாவளிக்காற்றில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் நின்றிருந்த ஒரு மரமும், ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த ஒரு மரமும் வேராடு சாய்ந்து கீழே விழுந்தது. இதேபோல் சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி முதல் வீதியில் ஒரு மின்கம்பமும், ஒரு மரமும் சூறாவளிக்காற்றில் முறிந்து கீழே விழுந்தது. அருகில் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபி -71, சென்னிமலை -54, ஈரோடு -53, கவுந்தப்பாடி -39.2, பவானிசாகர் -35.2, சத்தியமங்கலம் -28, பவானி -26, குண்டேரிபள்ளம் -24.4, கொடுமுடி-22.6, பெருந்துறை -21.3, வரட்டுப்பள்ளம் -17.8, கொடிவேரி -16.2, அம்மாபேட்டை -14.8 தாளவாடி -8, மொடக்குறிச்சி -5.
மழை அளவு அதிகபட்சமாக கோபியில் 71 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக மொடக்குறிச்சியில் 5 மில்லி மீட்டரும் பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story