சாத்தான்குளத்தில் கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
சாத்தான்குளத்தில் கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளத்தில் கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
கிணற்றில் குளிக்க சென்றபோது...சாத்தான்குளம் அருகே புளியடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர் வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் அதிபன் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். காய்கறி வியாபாரி. இவருடைய மகன் ரத்தினகுரு (25). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் நேற்று மதியம் சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர்.
சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் சுமார் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. கிணற்றின் மேல்பகுதியில் இருந்து அதிபன் கிணற்றுக்குள் குதித்தார். அப்போது கிணற்றின் பக்கவாட்டு சுவரில் அவரது தலை இடித்து தண்ணீரில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அதிபன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணைஉடனே ரத்தினகுரு கிணற்றுக்குள் குதித்து, அதிபனை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அதிபனை காப்பாற்ற முடியவில்லை. ரத்தினகுரு கிணற்றுக்குள் குதித்ததில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கிணற்றில் மூழ்கி இறந்த அதிபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ரத்தினகுருவுக்கு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.