நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 May 2018 4:15 AM IST (Updated: 23 May 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

பவானிசாகர், 

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் சேறு சகதியும் 15 அடி போக மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் திறந்துவிடும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது.

கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பவானிசாகரில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை அணைக்கு வினாடிக்கு 938 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 49.60 அடியாக இருந்தது.

நேற்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,239 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 49.96 அடியாக உயர்ந்தது. பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Next Story