திருப்பூர், அவினாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட 46 பேர் கைது: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டம்


திருப்பூர், அவினாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட 46 பேர் கைது: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 23 May 2018 4:45 AM IST (Updated: 23 May 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருப்பூர் மற்றும் அவினாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட 46 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் அமைதியான முறையில் அப்பாவி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்தனர். எனவே பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை கண்டித்து திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நேற்று மதியம் திடீர் சாலைமறியல் போராட்டம் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் சாலையில் இருந்து எழுந்திருக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினார்கள். இதில் கைதான 15 பேரை திருப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 4-வது மண்டல செயலாளர் வடிவேல் தலைமையில் திருப்பூர் டவுன்ஹால் அருகில் நேற்று மாலை சாலைமறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 10 பேரை வடக்கு போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் விடுதலை செய்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து அவினாசியில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதன்படி திருப்பூரிலும், அவினாசியிலும் சாலை மறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 46 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story