மாயக்கோட்டையும்...! மக்கள் மனசும்...!


மாயக்கோட்டையும்...! மக்கள் மனசும்...!
x
தினத்தந்தி 23 May 2018 3:27 PM IST (Updated: 23 May 2018 3:27 PM IST)
t-max-icont-min-icon

‘மக்களைச் சென்றடைதல்...’ இது அரசியலின் முக்கியமான மந்திரம். அரசியலில் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்கான அடிப்படை. இதற்காகவே தலைவர்கள் நாள்தோறும் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.

 அறிக்கை கொடுக்கிறார்கள். பேட்டி தருகிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். பயணங்களை மேற்கொள்கிறார்கள். காலந்தோறும் இருக்கும் இந்த வழிமுறைகளோடு சமூக வலைத்தளங்களில் நின்று விளையாட வேண்டிய கட்டாயம் இப்போது அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

என்ன செய்தாலும் அது உடனே டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பதிவாகிவிட வேண்டும்; வாட்ஸ்அப்பிலும் வலம் வர வேண்டும்; யுடியூப்பில் அதிக பார்வையாளர்களைப் பெற வேண்டும். கல்யாண வீட்டில் தாலி எடுத்துக் கொடுத்தாலும், சவ ஊர்வலத்தில் மாலை வைத்தாலும் அடுத்த நிமிடம் அதனை வெளியுலகிற்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.

2014-ல் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நரேந்திர மோடி செய்த பரப்புரையும், அதற்கு கிடைத்த வெற்றியும் நாடெங்கும் தலைவர்களையும் கட்சிகளையும் தலைச்சுற்ற வைத்தன. ‘இதைச் செய்யாவிட்டால் இனிமேல் அரசியல் இல்லையோ’ என்று நினைத்து மிரண்டு போனார்கள்.

தங்களுக்கு என சமூக வலைத்தளங்களில் தனி கணக்குகளை உருவாக்கி, அவற்றை நிர்வகிப்பதற்கான குழுக்களையும் நியமித்தார்கள். கட்சிகளில் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கி பொறுப்பாளர்களை நியமிக்கும் அளவுக்கு இப்போது வளர்ந்திருக்கிறது. சமூக ஊடகம் இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துவதில் அர்த்தமில்லாமல் இல்லை.

உதவி, மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து சென்னை வெள்ளத்தின்போது நிகழ்த்திய ஜாலம், ஜல்லிக்கட்டுப் புரட்சியை நடத்திக்காட்டிய வேகம் போன்றவற்றின் மூலம் ஊடகத்தின் ஒரு பிரிவாகவே சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன.

சுவரொட்டி அச்சடிக்கும் செலவைவிட அதனை ஒட்டுவதற்கு அதிக செலவாகும் இன்றைய சூழலில், பெரும்பாலும் இலவசமாக அல்லது செலவு குறைவான விளம்பர உத்தியாக சமூக ஊடகம் இருக்கிறது. ஊர் வாரியாக, வயது வாரியாக, பாலினம் வாரியாக, பார்க்கின்ற வேலை வாரியாக பிரித்தெடுத்து, யாருக்கு எந்த மாதிரி தகவல்களைத் தர வேண்டுமோ அதை குறி வைத்து செய்ய முடிகிறது.

‘இன்ன நேரத்தில், இன்ன பதிவைப் போட்டால் இவ்வளவு பேரைச் சென்றடையும்’ என்று கணிக்கும் அளவுக்கு ஒரு தொழிலாக ‘சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்’ உருவெடுத்திருக்கிறது. தனி படிப்பாகவே இதைச் சொல்லித்தரும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

அதிலும் இயல்பாக சென்று சேரும் ‘ஆர்கானிக் ரீச்’ ஒரு பக்கம். பணம் வாங்கிக் கொண்டு திட்டமிட்டு பரப்பும் ‘பெய்டு புரமோஷன்’ இன்னொரு புறம். இதன் உச்சமாகதான் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து தனிநபர்களின் தகவல்கள் திருடப்பட்டு இந்திய தேர்தல் களத்தில் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல். இந்த முறைகேட்டை அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் அப்படி நடக்காது என்று உறுதி கொடுத்திருக்கிறார்கள். நம்பகத்தன்மை கேள்விக்குறிதான்.

நேர்மறையாக எல்லாம் போய்க்கொண்டிருந்த வரை சமூக வலைத்தளங்கள் சரியே. அறிவியல் எப்போதும் இரண்டு பக்கமும் கூர் உள்ள கத்திதானே! எதிரிகளைப் பற்றி மிக எளிதில் பொய்யாகவும் அவதூறாகவும் தகவல்களைப் பரப்பும் களமாக சமூக ஊடகங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அதுவும் கட்சிகள் சம்பளம் கொடுத்து ஆள் வைத்து, அத்தகைய தகவல்களை உருவாக்கி, பரப்புகின்றன.

அதிகளவில் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கும் ‘சோஷியல் மீடியா’ முகவரியைச் சத்தமில்லாமல் விலைக்கு வாங்கி, அதன் வழியாக நினைத்தபடி தகவல்களைப் பரப்புகிறார்கள். வரமாக தெரிந்த சமூக ஊடகங்கள், அரசியல் களத்தை அச்சுறுத்தும் பூதமாக எழுந்து கொண்டிருக்கின்றன.

எப்படி மோசமான அரசியல்வாதிகளால் அறிமுகமான பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறை, ஒட்டுமொத்த அரசியலுக்கும் ஆபத்தாகி வருகிறதோ அதே பாதையில் சமூக ஊடகங்களும் பயணிக்கின்றன. இருந்தாலும் இப்போதைக்கு புலி வாலைப் பிடித்த கதைதான்.

சாதாரணமானவர்களுக்கு லைக், ஷேர் போல தலைவர்களுக்கு பின்தொடர்வோரின் எண்ணிக்கை முக்கியமாக கருதப்படுகிறது. அதிகம் பேர் தன்னை பின்தொடருகிறார்கள் என்பதைக் காண்பிக்க, பொய்யான முகவரிகளை (பேக் ஐடி) உருவாக்கி, பின்தொடர்வோர் எண்ணிக்கையைக் கூட்டி காண்பிக்கும் மோசடி எப்போதோ அம்பலத்திற்கு வந்தது.

பணப்பரிசு, செல்போன் டாப் அப் போன்றவற்றை செய்து கொடுத்து கட்சியின் தகவல்களைப் பகிர வைத்தார்கள் என்றொரு அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்தது. கூகுளில் தேடினால், அந்த குறிப்பிட்ட ஊழல் பற்றிய தகவல்கள் எடுத்தவுடன் கிடைக்காதபடி செய்துவிட்டதாக பெரிய தலைவரின் சோஷியல் மீடியா பொறுப்பாளர்கள் பேட்டியே கொடுத்தார்கள்.

இந்த தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் அந்த நேரத்தில் சர்ச்சையானதோடு சரி. அதன்பிறகு யாரும் கவலைப்படவில்லை. சரியா, தவறா, சாத்தியமுண்டா, இல்லையா என்றெல்லாம் கொஞ்சமும் யோசித்துப் பார்க்காத பெருங்கூட்டம் விரும்புதலையும் (லைக்), பகிர்தலையும் (ஷேர்) செய்து கொண்டே இருக்கிறது. இதன் வீச்சும், மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு இணையத்தின் மீது இருக்கின்ற ஈர்ப்பும் அத்தனை வீரியமானது.

உண்மையிலேயே சமூக வலைத்தளங்கள் அரசியலில் தாக்கம் ஏற்படுத்தும் இடத்தில் இருக்கின்றனவா என்று கேட்டால், ஆம் என்ற பதிலையே அதிகம் கேட்க முடிகிறது. அம்பானி கொடுத்த மொபைல் டேட்டா உட்பட இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நகரம், கிராமம், சிற்றூர், பேரூர் என்ற பாகுபாடு இல்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலை முடுக்கெல்லாம் போய்ச் சேர்ந்திருக்கின்றன.

இவற்றில் கட்டுபாடின்றி இயங்க முடிவதை வைத்து சாமானியன் தனக்கு பெரிய சுதந்திரமும், அதிகாரமும் கிடைத்துவிட்டதாக நம்புகிறான். அல்லது அப்படி ஒரு மாயை அவனுக்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவனிடம் நேரடியாக தமது கருத்துகளைக் கொண்டு சேர்க்க அரசியல்வாதிகளால் முடிகிறது. தேவைப்பட்டால் அவனோடு உரையாடும் வாய்ப்பும் இதில் இருக்கிறது.

ஆனால் இத்தகைய சக்தியை மட்டுமே நம்பி இந்தியா போன்ற தேசத்தில் தொடர்ச்சியாக அரசியல் செய்துவிட முடியாது. அனைத்தையும் தொழில்நுட்ப பிரிவு பார்த்துக்கொள்ளும் என்று சொல்லி, எதிரே வருகிற தொண்டர்களை, மக்களை, அவர்களது பிரச்சினைகளை முகம் கொடுத்து பார்க்காவிட்டால் அந்த அரசியல் எடுபடாது.

ஏனெனில் சமூக ஊடகங்களின் தாக்கம் பெரிதாக இல்லாத சாதாரண மக்கள்தான் வாக்களிப்பதில் பெரும்பாலானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதே முக்கியம். இணையம் என்கிற மாயக்கோட்டையை மட்டும் வைத்துக்கொண்டு அதனைச் சாத்தியப்படுத்த முடியாது.

அந்தந்த நேரத்தில் ஒரு கருத்தையோ, தோற்றத்தையோ உருவாக்குவதற்கும், உணர்வு நிலை உச்சத்தில் இருக்கும் போது கூட்டம் கூட்டவும் சமூக ஊடகங்கள் பயன்படலாம். மக்கள் மனங்களை வென்று ஓட்டு வாங்குவதற்கு இணைய பிரசாரம் மட்டுமே போதாது. இ-மெயிலில் வாக்கு சேகரித்து, ஆன்லைனில் ஓட்டு போடும் யுகம் இன்னும் வரவில்லையே!

- கோமல் அன்பரசன், ஊடகவியலாளர்

Next Story