அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 96.13 சதவீதம் பேர் தேர்ச்சி


அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 96.13 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 23 May 2018 10:45 PM GMT (Updated: 23 May 2018 7:06 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 96.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரியலூர்,

தமிழகத்தில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் மாணவர்களின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

அரியலூர் மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 5 ஆயிரத்து 174 மாணவர்களும், 5 ஆயிரத்து 738 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 912 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 916 மாணவர்களும், 5 ஆயிரத்து 574 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 490 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 96.13 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 93.33 ஆகும். கடந்த ஆண்டு 25-வது இடத்தில் இருந்த அரியலூர் மாவட்டம் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதால் 12-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவு வந்தது.

அதன்மூலம் மாணவ-மாணவிகள் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொண்டனர். இதனால் பலர் பள்ளிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. குறைந்த அளவிலான மாணவ-மாணவிகளை தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள பயின்ற பள்ளிகளுக்கு வந்ததை காண முடிந்தது. பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் பார்த்து சென்றனர்.

இதேபோல் அரியலூர் பஸ் நிலையம் அருகேயுள்ள மாவட்ட மைய நூலகம் மற்றும் கிளை நூலகங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தகவல் சேவை மையம் உள்ளிட்ட இடங்களிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை கட்டணமின்றி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு மாணவ, மாணவிகள் சென்று தேர்வு முடிவை பார்வையிட்டு மதிப்பெண் விவரத்தை நகல் எடுத்து கொண்டனர். 

Next Story