நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: இலங்கை வாலிபர் சாவு
சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜேசுதாஸ் என்பவரின் மகன் கிருபதாஸ் (வயது 22). இவரது நண்பர் இதே முகாமைச் சேர்ந்த பிரகாஷ் (19) ஆவார்.
அவர்கள் 2 பேரும் நேற்று காலை செங்குன்றத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கிருபதாஸ் ஓட்டி வந்தார். பின்னால் அவரது நண்பர் இருந்தார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள புதுவாயல் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வரும்போது, அதே திசையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இலங்கை வாலிபர் கிருபதாஸ் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் இருந்த அவரது நண்பர் பிரகாஷ் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story