துப்பாக்கி ஏந்திய போலீசார் வீதி, வீதியாக சென்று கண்காணிப்பு வன்முறையை கைவிடுமாறு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தல்
தூத்துக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வீதி, வீதியாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வீதி, வீதியாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வன்முறையை கைவிடுமாறு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினார்கள்.
2–வது நாளாக கலவரம்ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று 2–வது நாளாக கலவரம் நீடித்தது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகளையும் வீசினார்கள். இதனால் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். தூத்துக்குடியில் பெரும்பாலான பகுதி போலீசார் கட்டுப்பாட்டில் வந்தது.
வீதி வீதியாக சென்று கண்காணிப்புஇதையடுத்து போலீசார் ஏராளமான வாகனங்களில் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். வீதி, வீதியாக சென்று துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினார்கள். அப்போது, வாகனங்களில் நின்றவாறும், நடந்து சென்றும் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 நபர்களுக்கு மேல் கூடுவது சட்டவிரோதம் ஆகும். பொதுமக்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளியே வந்து போராட்டங்கள் நடத்த வேண்டாம். பொதுமக்களின் பாதுகாப்புக்காக போலீசார், மாவட்ட நிர்வாகம், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் வன்முறையை கைவிட்டுவிட்டு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்து சென்றனர்.